கோயம்புத்தூர்: மத்திய அரசு கூட்டணியில் இருப்பவர்கள், இல்லாதவர் என பார்த்துப் பாதுகாப்பு அளிப்பதில்லை. அச்சுறுத்தல் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு தரப்படுகிறது. அப்படி தான் தவெக தலைவர் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு தவெக தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல் உள்ளது என அறிந்தும் பாதுகாப்பு அளிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மாநில அரசு விஜய்க்கு பாதுகாப்பு தரவில்லை:
அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு 'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தபோது, அவர்களுக்கும் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இல்லை என்று எல்லாம் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? எனப் பார்த்து மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனால், தவெக தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரிந்தும், மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை.
நமது நாட்டின் மீது நடைபெற்ற மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றான, கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து, இன்றோடு 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் தாக்கம் இன்னும் தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவாய் இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 13, 14 ஆகிய இரண்டு… pic.twitter.com/axzSRplSCN
— K.Annamalai (@annamalai_k) February 14, 2025
முதலமைச்சருக்கு, ஆளுநருக்கும் இருக்கும் பிரச்னை வேறு, இதில் முதலமைச்சர் ஏன்? என்னை இழுக்கிறார். கீழே விழுந்து சில பேருக்குத் தலையில் அடிபட்டால் தான் புத்தி வரும் என முதலமைச்சர் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைத் தேர்தல் களத்தில் பார்க்கலாம். திமுகவில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். அமைச்சர் சேகர்பாபுவும் அங்கிருந்து வந்தவர் தான்.
அமைச்சர் கஞ்சா கருப்பை மிரட்டுகிறார்:
தமிழ்நாட்டில் சுகாதாரம் தரமானதாக இல்லை. நடிகர் கஞ்சா கருப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மிரட்டுகிறார். கஞ்சா கருப்பு சொன்னது பொய் என்பதை நிரூபிக்க ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்துவோம். அமைச்சரை, நடிகர் கஞ்சா கருப்பு, நான் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மையினர் நிச்சயமாக திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியம் விவாதத்திற்குத் தேதியும் நேரத்தையும் குறித்தால் விவாதத்திற்கு வரத் தயார்.
இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம் 3.0 இன்று துவக்கம்: தமிழ்நாட்டில் இருந்து 1200 பேர் பங்கேற்பு!
அதிமுகவில் தலையிடுவதில்லை:
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள். பிரதமரின் வாக்குறுதியைத்தான் மக்கள் நம்புவார்கள். மக்களுக்கு உதவித் தொகை கொடுப்பதால், மக்கள் அடிமையாக இருப்பார்கள் என நினைத்தால் அது தவறு" எனத் தெரிவித்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.