சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக பணியாற்றிய செந்தில்குமாரி, 2018 ஆம் ஆண்டு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில்குமாரி தனக்குரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், மனுதாரர் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றியதால் எந்த பணப்பலன்களும் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி அவரது மனுவை நிராகரித்துள்ளது. இதையடுத்து, தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில்குமாரி சென்னை உயிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று (பிப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பரத சக்கரவர்த்தி, “வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு நிறைவேற்றிய தூதரக உறவு சட்டப்படி, வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்தியச் சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தாது.
இதையும் படிங்க: உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆனால், இந்தியாவில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் பொருந்தும் என்பதால், செந்தில்குமாரியை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என இலங்கை துணை தூதரகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.