திருப்பூர்: ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திருப்பூரில் ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உள்துறையை கவனித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆகி உள்ளார். இதன் மூலம் யார் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
மனசுமையின் வெளிப்பாடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது இதயத்தில் உள்ள மனசுமையை வெளிப்படுத்தி உள்ளார்.அவருடைய வாதம் உணர்வுபூர்வமானது. செங்கோட்டையன் கட்சியின் மூத்த நிர்வாகி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் இருந்து கட்சியில் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
நானும் அவரும் அம்மா சொன்ன அனைத்து பணிகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கட்சிக்காக பணியாற்றக் கூடிய நல்ல மனிதர். அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். இதனை ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் காரணமாக 2016ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை அதிமுக வெற்றி பெற்றது.
பிரிந்திருந்த கட்சி மீண்டும் ஒன்றாக இணைந்த தருணத்தில் எடப்பாடி பழனிசாமிதான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினார். மீண்டும் அவரே ஒற்றைத் தலைமை வேண்டுமென்று கொண்டு வந்தார். பழனிச்சாமி என்ற ஒற்றைத் தலைமையில் கீழ் எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வியை கண்டிருக்கிறது.
தேஜகூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?: கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி, தனது வலது பக்கத்தில் பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி உட்கார வைத்தார். நான்கே நாட்களில் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.அதிமுக தொண்டர்கள் இப்போது மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்து இருக்கும் தலைவர்கள் இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு என்ற மனநிலையில் உள்ளனர்.
அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் புதிதாக எந்தவித பிரச்னையும் எழுப்ப வேண்டாம் என அனைத்து தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 1965ல் மிகப்பெரிய மொழிப்போராட்டம் நடைபெற்றபோது தமிழக மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் தான் பொது மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியை மத்திய அரசு தந்தது. இதுதொடர்ந்து நீடித்தால் தமிழக மக்களுக்கு நன்மையாகும். மத்திய அரசு பரவலாக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி தருகிறது. திரைப்படங்களில் வருவது போல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிரிப்பு அரசியல்வாதி போல உள்ளார்,"என்று ஓபிஎஸ் கூறினார்.