சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுச் செய்யப்பட்டுள்ள 2,642 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி புதிய மருத்துவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகள் வழங்குவார். அதன்பிறகு மருத்துவத்துறையில் ‘சீரோ’ காலிப்பணியிடம் என்ற நிலைமை உருவாகிவிடும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநரக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 1,127 மருத்துவர்களுக்கும், கலந்தாய்வில் பணியிடம் மாறுதல் பெற்றவர்களுக்கும் அதற்கான உத்தரவுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனையடுத்து அவர் பேசியதை கீழ்வருமாறு காணலாம்.
விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல்
மருத்துவ பணியை பொறுத்தவரை மனதை விரும்பி செய்தால் தான் வெற்றிக்கொடியை நாட்ட முடியும். படிப்பை முடித்த பின்பு பல கிலோ மீட்டர் தள்ளி பணி கிடைத்தால், அதை முழு மனதோடு செய்ய முடியாது. கடந்தாண்டு பிப்ரவரியில் காலி பணியிடங்களை கண்டறிந்து நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

அவர்கள் விரும்பிய பணியிடங்களுக்கு பணிமாறுதல் செய்வோம் என உறுதியளித்தோம். பணி மாறுதல் கேட்டு பல பேர் என்னை தொல்லை செய்தீர்கள். அனைவருக்கும் ஒன்றாக கொடுப்பேன் என தெரிவித்து தற்போது பணிமாறுதல் ஆணை வழங்கி உள்ளேன்.
தற்போது 893 பேருக்கு விரும்பும் இடத்திற்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. சர்ப்ரைஸ் விசிட் என்ற பெயரில் மூன்று மருத்துவமனைகளில் செல்வேன். அங்கு சரியாக பணிபுரியாத, நேரத்திற்கு வராத மருத்துவர்களுக்கு எதிராக தற்காலிக பணி இடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற நடவடிக்கைகளை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டியுள்ளது.
பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB | எம்.ஆர்.பி) சார்பில் ஜனவரி 5-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், எம்.பி.பி.எஸ் முடித்த 24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 14,855 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதற்கிடையே, கூடுதலாக 89 காலி இடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை 2,642 என அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2,642 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற எம்.ஆர்.பி தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும்? நிர்வாக இயக்குநர் வெளியிட்ட தகவல் |
அடுத்த வாரம், அதாவது பிப்ரவரி 26-ஆம் தேதி, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அரங்கில் வைத்து 2,642 புதிய மருத்துவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர், மருத்துவத்துறையில் ‘சீரோ’ காலிப்பணியிடம் என்ற நிலை உருவாகி இருக்கும். மேலும், மருத்துவத்துறை மிகப்பெரிய சாதனை வரலாற்றைப் படைக்க உள்ளது.
நான்கு ஆண்டுகளில் எத்தனை பணியாணைகள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்படை தன்மையோடு மருத்துவத்துறையில் பணி மாறுதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொது சுகாதாரத் துறையில் 1,021 மருத்துவர்களுக்கு பணி ஆணை தரப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாடு வரலாற்றில் அதிக காலிப்பணியிடங்கள் இருந்த 20 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அந்த 20 மாவட்டங்களில் மருத்துவர்கள் சென்று பணியாற்ற வேண்டுமென்று கலந்தாய்வு நடத்தி அங்கு அனுப்பும் நிலை ஏற்பட்டது. ஒரு வருட காலம் பணி மாறுதல் கூறி விண்ணப்பிக்க மாட்டோம் என்று நீங்கள் பணிக்கு சென்றதற்கு உங்களை பாராட்டுகிறேன்.
இதில் 893 மருத்துவர்களுக்கு அவர் அவர் விரும்பி கேட்ட இடத்தில் பணி கிடைத்துள்ளது. அரசு பொறுப்பேற்ற பிறகு 12,690 மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம் பணி ஆணை பெற்று உள்ளனர், மருத்துவத்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் என 40,490 பேர் பணி மாறுதலை கலந்தாய்வு மூலம் பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற 400 பேர் பங்கேற்றதாக எழும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது . ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அத்தீப் என்கிற 11 வயது சிறுவர் முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை சென்னை அழைத்து வந்து உயர் ரக சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறேன்,” எனக் கூறினார்.