சென்னை: சென்னை வியாசர்பாடி பொன்னப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (51). இவர் தி.நகரில் (தியாகராய நகர்) பைனான்ஸ் ஆலோசகர் என்ற அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2024 செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணியளவில், மாரிமுத்துவின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவர்களது உறவினர்கள் பார்த்த நிலையில், அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாரிமுத்து உடனடியாக வேலையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, சுமார் 58 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த அவர், வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்களின் புகைப்படங்களை எடுத்து வெளிமாநில போலீசாருக்கு அனுப்பி பல்வேறு தரவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 15ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சென்ற வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.
ஆனால், போலீசாரின் வருகை குறித்து முன்கூட்டியே அறிந்த அவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் வீட்டில் சம்மன் கொடுத்து விட்டு போலீசார் அங்கே காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சென்னைக்குச் சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
மீண்டும் சென்னை திரும்பிய போலீசார் நேற்று முன்தினம் (பிப்.20) பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும், வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் இடைபட்ட பகுதியில், மூன்று பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், காவல்நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் நந்தகுமார் (27), சந்திரகாந்த ஆனந்த் மானே (32), ஸ்ரீகாந்த் ஆனந்த் மானே (27) என்பது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் மூன்று பேரும் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புனைவிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து, சென்ட்ரல் பகுதியில் அறை எடுத்துத் தங்கி பல்வேறு இடங்களில் நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது, வியாசர்பாடியில் உள்ள சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு நாட்களாக நோட்டமிட்ட போது, கணவன், மனைவி இருவரும் தினமும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்வதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த வீட்டில் நுழைந்து 58 சவரன் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: சொத்துகள் முடக்கப்பட்டது அமலாக்கத்துறையின் அதிகார துஷ்பிரயோகம்... இயக்குநர் ஷங்கர் அறிக்கை
அதுமட்டுமின்றி, இவர்கள் இங்கு தெரிந்த நபர்கள் இருவரிடம் கொள்ளையடித்த நகைகளை 24 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். முதலில் கிடைத்த, 14 லட்சம் ரூபாவை மூன்று பேரும் பங்கு பிரித்துக் கொண்டுள்ளனர். பாக்கி பணத்தை நகைகளை விற்று பிறகு தருவதாகக் கூறிவிட்டுச் சென்ற நபர்கள், இவர்களிடம் குறிப்பிட்ட அந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று வடமாநில நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, வடமாநில நபர்களிடம் இருந்து நகைகளை, ஏமாற்றிய இரண்டு திருடர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.