திருச்சி: திருச்சி சரக டிஐஜி வருண் குமார் வழக்கில் அடுத்த முறை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வருண்குமாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி தலைவர் மீது தனிப்பட்ட குற்றசாட்டுகளை பொதுவெளியில் வைத்து வருவதும், அதற்கு சீமான் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பது போல காவல்துறை அதிகாரி வருண்குமாரை சாடி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வருண்குமார் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜி-யாக உள்ளார்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் குறித்து அவதூறாக பேசியதாக வருண்குமார், சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் இன்று (பிப்.19) சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை நீதிபதி கூறியிருந்தார்.
ஆனால், சீமான் அந்த நோட்டீசை பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், இன்று நீதிமன்றத்திலும் ஆஜராகாத நிலையில் விசாரணைக்காக திருச்சி சரக டிஐஜி வருண் குமார் நீதிபதி முன் ஆஜரானார்.
இதையும் படிங்க: தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியா? மதுரையில் சீமான் பேட்டி!
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருண் குமாரிடம் சீமான் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், '' மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை. இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் கூறுவார்'' என தெரிவித்து விட்டு சென்றார்.
'பிடிவாரண்ட் வாய்ப்பு'
தொடர்ந்து டிஐஜி வருண்குமார் தரப்பு அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், '' திருச்சி சரக டிஐஜி வருண் குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. சீமான் ஆஜராகாத காரணத்தை நீதிமன்றம் பெற்றுக்கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அவரை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை என்றால் நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். பிடிவாரண்ட் கூட பிறப்பிக்க வாய்ப்புள்ளது'' என அவர் தெரிவித்தார்.