சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். தற்போது தமிழில் விஜய்யின் கடைசி திரைப்படமான ’ஜனநாயகன்’, சூர்யாவின் ’ரெட்ரோ’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பிரகாஷ் ராஜின் நண்பருமான கௌரி லங்கேஷ் சுடப்பட்டு இறந்தார். அதன் பிறகு திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் பலவற்றையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் தனது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், “உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.” என கூறியுள்ளார். மேலும் கெட் அவு மோடி எனும் ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
— Prakash Raj (@prakashraaj) February 21, 2025
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking
மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. தமிழக அரசு கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் மட்டுமே நிதி அளிக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மும்மொழிக் கொள்ளையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் எதிர்ப்பு குரல்களே அதிகம் இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் புதிய தேசிய கல்வி கொளகையில் உள்ள பல்வேறு விஷயங்களும் மாணவர் நலனுக்கு எதிரானது என அரசியல் தலைவர்கல் எதிர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தொடங்கிய ’கே.ஜி.எஃப்.’ இயக்குநரின் புதிய படம்
முன்னதாக பிரகாஷ் ராஜ் இந்தியாவில் நடந்து வரும் மகா கும்பமேளாவை விமர்சித்தும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறிப்பிட்டும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.