ஒருபுறம் முடி உதிர்தல் பிரச்சனை அனைவரையும் கவலையை ஏற்படுத்தினால், மறுபுறம் இள நரை பிரச்சனை நிம்மதியை கெடுத்துவிடுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளையும் இந்த இளநரை பிரச்சனை பாடாய் படுத்துகிறது. இன்றைய நவீன யுகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் இணையதளத்திலேயே கண்ணும் கருத்துமாக மூழ்கி இருப்பதும், சத்தான உணவுகளை தவிர்த்து விரும்பிய உணவை இஷ்டப்பட்ட நேரத்தில் ருசிப்பதும் முதுமையில் வர வேண்டிய நரையை இளமையிலேயே ஏற்படுத்துகிறது.
அதனால், இள நரையை இயற்கையான முறையில் எப்படி நீக்குவது? கருகருவென முடி வளர்ப்பது எப்படி? என்ற தேடல்களும் இணையத்தில் அதிகரித்திருக்கிறது. இள நரை வந்த பிறகு தடுப்பதற்கு முயற்சிப்பதை விட, இள நரை வராமல் தடுப்பது தான் புத்திசாலித்தன. அதற்கு என்ன வழி? என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்...
- கூந்தலை இளமையாகவும், இள நரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள நெல்லிக்காய் சிறந்த தேர்வாகும் என NCBIல் வெளியான Premature Graying of Hair எனும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிலிகா அஃபிசினாலிஸ் என்றும் அழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது என ஆய்வில் தெரிவித்துள்ளது.
- உணவில் நெல்லிக்காய் அடிக்கடி சேர்த்துக்கொள்வது சிறந்த நிவாரணமாக இருக்கிறது. மேலும், நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலை முடியின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் இளநரை வராமல் தடுக்கலாம்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் கட்டாயமாக கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அனைவரும் அவர்களது உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை. கருவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாற்றை முழுங்குவது, உணவில் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் உண்பது கூந்தலை கருமையாக மாற்ற உதவுகிறது.
- இளநரைக்கு பித்தம் கூட காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இளநரை பிரச்சனை உள்ளபவர்கள் காலையில் டீ, காபி அருத்துவதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறில் இரண்டு சொட்டு தேன் கலந்து பருகி வந்தால் பித்த நரை வந்த இடமே தெரியாமல் நீங்கும்.
- தினசரி உணவில் பல வகையான கீரை உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கரிசலாங்கண்ணி கீரை கண்ணுக்கு குளுமை தருவதோடு, கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரையாக உள்ளது. மேலும், இந்த கீரையின் சாற்றை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்துகாயவைத்து முடியில் தேய்த்து வர, இள நரை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். முருங்கை கீரையும் முடி வளர்ச்சிக்கும் இளநரைக்கும் நல்ல தீர்வை தரும்.
- சீரகம், வால்மிளகு, வெந்தயம் இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வர இள நரை நீங்கும்.
இளநரை ஏற்பட காரணம்?: நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் மெலனின் (Melanin) சுரப்பு குறைவதன் காரணமாக முடி நரைக்கிறது. மெலனின் சுரப்பி செயல்படும் நேரம் இரவு 11 முதல் 12 மணி வரை மட்டுமே என்பதால், அந்த நேரத்தில் நாம் உறங்குவதே சுரப்பி சீராக செயல்படுவதற்கு ஏற்புடையதாக இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் வேலை காரணங்களாலும், செல்போன் பார்ப்பது, பார்ட்டி செய்வது போன்ற காரணங்களால் தூங்கும் நேரத்தை குறைத்துக்கொள்வதால் தான் மெலனின் சுரப்பி நம்முடன் ஒத்துழைக்க மறுக்கிறது.
கட்டுப்படுத்த முடியுமா?: நரை முடி வந்தபின் கட்டுப்படுத்துவதற்கும், அதிகமாக முடி நரைக்காமல் தடுப்பதற்கும் வால்நட், பீட்ரூட், நெல்லிக்காய், கேரட் போன்ற இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றுக்கு மெலனின் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் திடீரென எழுந்திருக்கிறீர்களா? மீண்டும் தூங்க முடியவில்லையா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்