புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சிறு குழந்தைகள் போல தமிழ்நாடும், கேரளாவும் அடித்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு தமிழ்நாடு அரசின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் அருகே மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதியை கேரள அரசு ரத்து செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டுள்ளது
ஒரே அமர்வு முன்பு விசாரிக்கலாம்: இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,"முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு, கேரள அரசுகளின் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளின் விவரங்களைக் கொடுத்தால், அதனை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அனைத்து விவகாரங்களையும் ஒரே அமர்வு முன்பு விசாரிக்க கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த பிரச்னையை எடுத்துக் கொண்டால், சில மரங்களை வெட்ட வேண்டும் என்று அவர்கள் (தமிழ்நாடு அரசு) கோருகின்றனர். அணைப் பகுதிக்கு செல்ல வேண்டும். சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். நீங்கள் (கேரளா) ஒரே ஒரு படகுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்கிறீர்கள், இரண்டு படகுகள் வேண்டும் என்றும் அவர்கள் சொல்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது பள்ளிக்குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது," என்றனர்.
கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா,"படகுகள் செல்வது குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது,"என்றார்.
நீதிமன்ற விசாரணைக்குள் வருமா?: அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், "அங்கு என்ன நடக்கிறது என்று மட்டுமே இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். என்ன வேண்டுமானாலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளலாம். ஆனால், உங்களுடைய செயற்பொறியாளர் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று நீங்கள் (கேரளா) சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் (தமிழ்நாடு) அவ்வாறு கூடாது என்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்த மாதிரியான விஷயங்கள் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.
"முல்லைப்பெரியாறு அணை விவகார்த்தில் கண்காணிப்பு குழு ஒன்றை மத்திய அரசு அமத்துள்ளது. தமிழக அரசுக்கு, கேரள அரசுக்கு சாதகமான ஒன்றல்ல. நடுநிலையான அமைப்பு,"என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நஃபாடே, "கேரள அரசு கடந்த 25 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள அணை இடிக்கப்பட வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்த முனைகின்றனர். அதன் காரணமாக ஏதேனும் நாங்கள் சொல்வது தடையாக இருக்கிறது,"என்றார்.
கண்காணிப்பு குழு கூடி முடிவு எடுக்க வேண்டும்: "கடந்த 25 ஆண்டுகளாக தீர்வு காணப்படவில்லை என்று சொல்வது பதிலாக இருக்க முடியாது. இந்த பிரச்னையை தீர்க்கவே நாங்கள் முயற்சி செய்கின்றோம். கண்காணிப்பு குழு உடனடியாக கூடி (தமிழ்நாடு கூறும் முறையீடுகள்) பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று சொல்கின்றோம். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யட்டும். அதன் பின்னர் நாங்கள் அதற்கு தீர்வு காண்கின்றோம்,"என்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நஃபாடே,"குழுவானது முடிந்த வரை பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறது. ஆனால், அதனை கேரள அரசு பின்பற்றுவது இல்லை," என்றார். அப்போது குறுக்கிட்ட கேரள அரசின் வழக்கறிஞர், கமிட்டியில் இடம் பெற்றிருப்பவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மீண்டும் குழுவை மாற்றி அமைக்கும்படி சொல்கின்றோம். ஆனால், சில பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தடையாக இருக்கக் கூடாது.
ஒரு வாரத்துக்குள் இரண்டு மாநிலங்களின் அதிகாரிகளை அழைத்து குழுவின் தலைவர் கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டு வாரத்துக்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்றில் இருந்து நான்காவது வாரத்துக்குள் அதுகுறித்து கண்காணிப்புக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என்று உத்தரவிட்டனர்.