மதுரை: பாரம்பரிய ஸ்தலங்களின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பாக, மதுரை மாங்குளம் மீனாட்சிபுரம் மலையில் உள்ள மிகப் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் குறித்த 'தமிழி சூழ் மாமதுரை' என்ற ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்றுள்ளது. இதில், எழுத்தாளர் சுப்பாராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சுப்பாராவ் பேசியதாவது, “மதுரையை, 'ரவுடி சூழ் மதுரை' என்பதாகவே தமிழ்த் திரைப்படங்களின் கட்டமைப்பு இருந்தது. ஆனால், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய 'ஆகஸ்ட் போராட்டம்' என்ற நூலை வாசித்தபோது, இது குறித்து ஆங்கிலேயேர் காலத்திலேயே எழுதப்பட்ட குறிப்பு இருந்ததைக் கண்டறிந்தேன்.
1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் தமிழ்நாட்டில் எப்படி நடைபெற்றது? அதன் விளைவுகள் என்ன? என்பது குறித்த தகவல்கள் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலில் பின்னிணைப்பாக அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பத்திரிகை, காலண்டர் ஆப் ஈவன்ட் ஆஃப் தி சிவில் டிஸ்ஒபிடியண்ட் மூவ்மெண்ட் (Calendar of Events of the Civil Disobedience Movement) 1942 ஆகஸ்ட்-டிசம்பர் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் எப்படி நடந்தது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டன? விதிக்கப்பட்ட அபராதம் என்ன? யாரெல்லாம் தண்டனை பெற்றார்கள்? போன்ற விபரங்கள் இடம் பெற்றிருந்தன. அதில், மதுரை மாவட்டம் குறித்த தகவலில், “மதுரை நகரில் ரவுடிகள் அதிகளவில் இருந்ததால், இப்போராட்டம் மதுரை நகரை மையமாகக் கொண்டே இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையின் அடையாளம் மதுரை:
உச்சபட்ச நாகரிகத்தின் தொன்மையின் அடையாளமாகத் திகழக்கூடியது மண் மதுரை. பொதுவாக ஊர் தொன்மையாக இருக்கும், ஆனால் அங்கு புழங்கப்படும் மொழி அவ்வாறு இருக்காது. மதுரையைப் போன்றே மிகப் பழமையான ஊர் இந்தியாவில் எடுத்துக் கொண்டால், பாடலிபுத்திரம் என்று அழைக்கப்படும் பாட்னா. அங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுக்குடியினர் சமஸ்கிருதத்தில் பேசியுள்ளனர். எளிய மக்கள் பிராகிருதம் பயன்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழிசூழ் மாமதுரை' - மதுரையை பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" - கரு பழனியப்பன் |
அதற்குப் பின்னர் போஜ்புரி, மைதிலி, மகாஹி, அங்கிகா, லஜ்ஜிகா போன்ற மொழிகள் இருந்தன. ஆனால், தற்போது வட இந்தியா முழுவதும் இந்தி என்ற பகாசுரன் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது போஜ்புரி மட்டும் தாக்குப்பிடித்து நிற்கிறது. உலகளவில் ரோம் நகரம் மதுரையைப் போன்று தொன்மை வாய்ந்த நகரமாகும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு லத்தீன் பேசப்பட்டது. இன்று அது சடங்குக்கான மொழியாக மட்டுமே உள்ளது.
மொழியோடு சேர்ந்து வளர்ந்த மதுரை:
தற்போது ரோமில் பேசக்கூடிய இத்தாலிய மொழி 400-500 வருடங்கள் பழமையானது. இவற்றோடு ஒப்பிடும்போது, தானும், தன்னுடைய மொழியும் சேர்ந்து செழித்து வளர்ந்த ஒரே நகர் மதுரை மட்டும்தான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் எழுத்து மூலம் பதிவு செய்வதற்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. பேச்சாளர்களுக்குதான் முக்கியத்துவம் இருந்தது. ரோமப் பேரரசர் டைட்டஸ் (Titus), ரோம் செனட்டில் பேசும்போது 'எழுதப்பட்டது அப்படியே இருக்கும், பேசப்பட்டது காற்றில் பறக்கும்' என்ற புகழ் பெற்ற லத்தீன் பழமொழியைக் குறிப்பிடுகிறார்.
அதற்குப் பொருள் 'எழுதப்பட்ட எழுத்து இறந்துபோன எழுத்து. ஆனால், பேசுபவன் அந்த எழுத்துக்கு குரல் கொடுக்கும்போதுஅது காற்றில் உலகெங்கும் பறந்து செல்கிறது' என்பதாகும். இயேசு, புத்தர், மகாவீரர் உட்பட யாருமே தங்கள் கைப்பட எழுதியாக எந்த வரலாறும் இல்லை. இது தான் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் முழுவதும் இருந்த நிலை.
அதற்கு மாறாக, இங்கு ஒரு தமிழன் சின்னச் சின்ன செய்திகளை பாறையில் எழுதி வைத்துள்ளதைப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. மதுரையைச் சுற்றி நிறைய கல்வெட்டுகளில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதை அறியும்போது, தமிழர் நாகரிகம் மிக உயர்ந்தது என்று வெறும் வாய்ப்பேச்சுக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ சொல்லப்பட்டதில்லை. அதற்கு ஆதாரங்கள் இந்த கல்வெட்டுக்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.