சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து கோவளம் மெரினா கடற்கரை வரை ஆழ்கடலில் வாழும் ஐந்து வகையான ஆமைகள் தொடர்ந்து அதிக அளவில் இறந்து வருகின்றன. அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வனத்துறை, காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று (பிப்.14) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதை அடுத்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடலோரப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆமைகள் கடற்கரையில் வந்து முட்டை இடுவது வழக்கம். சாதாரணமான படகுகள் சென்றால் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், விசைப்படகுகள் செல்லும் பொழுது தான் ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் தூண்டில் வலைகளில் ஆமைகள் சிக்கி உயிரிழக்கின்றன. இந்த ஆண்டு ஆந்திரா கடற்கரையில் 1,111 ஆமைகள் இறந்துள்ளன. தமிழக கடற்கரையில் 1,328 ஆமைகள் இறந்துள்ளன. விதிகளை மீறி ஐந்து கடல் மைல்கள் (கிலோமீட்டர்) தூரத்தில் மீன் பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
அப்படி தற்போது வரையும் 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு வழங்கக்கூடிய டீசல் செலவு கூட இந்த 208 பேருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். மீனவர்களுக்கு மீன்களும், ஆமைகளும் இரண்டு கண்கள் போல. ஆமைகளை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும். 3,000 விசைப்படகுகள் தமிழ்நாட்டில் உள்ளன. அது கடலோர பகுதிகள் முழுவதும் பயன்படுத்தக்கூடியது. கடலூர், நாகப்பட்டினம், சென்னை ஆகிய கடற்கரைகளில் தான் ஆமைகள் அதிகமாக உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.
இதையும் படிங்க: நள்ளிரவில் கதவை உடைத்து அலுவலகத்திற்குள் புகுந்த கரடி!
படகில் செல்லக்கூடிய மீனவர்கள் ஆமைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுக்க வேண்டும். வரும் ஐந்து மாதங்களில் ஆமைகள் முட்டை பொறிக்க கூடிய நேரம். இந்த நேரங்களில் பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை ஆமைகள் குஞ்சு பொறிக்கக்கூடிய நேரம். இந்த ஐந்து மாதங்கள் மட்டும் பாதுகாப்பான முறையில் மீனவர்கள் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.