சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பள்ளிக்கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காதது குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அவரது விரிவான பேட்டி:
சமக்ர சிக்சா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தை 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான திட்டங்களை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள் கூற, ஒன்றிய அரசின் திட்ட ஒப்புதல் குழு அவற்றுக்கு ஏற்பளிக்கும். ஒரு மாநிலத்திற்கு தேவைப்படும் நிதியை அந்த மாநிலம் கூறிய பின்னர் ஒன்றிய அரசின் திட்ட ஏற்பளிப்பு குழு அதற்கான நிதியை குறைத்து ஒப்புதல் வழங்கும்.
ரூ. 2154 கோடி நிதி தரவில்லை: இந்த நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிப்பாக வழங்கும். அதன்படி இத்திட்டத்துக்கான நிதியை 2018 ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தமிழகம் பெற்று வந்தது. இந்த நிதியையும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணையாக பிரித்து அளிப்பார்கள். 2023 ஆம் ஆண்டு கடைசித் தவணை நிதி அளித்தபோது பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், இந்தியா முழுவதும் 15000 பள்ளிகளை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். பள்ளிகளை மேம்படுத்துவது நல்ல விஷயமாக இருந்தாலும் அதில் உள்ள சரத்துக்கள் என்ன என்பதை பார்த்தபோது மும்மொழிக் கொள்கையையும் தேசிய கல்விக் கொள்கையும் உள்ளே புகுத்துவது போல் அதன் சாராம்சங்கள் இருந்தன.
தமிழ்நாட்டில் காலம் காலமாக ஒருமுறை பின்பற்றி மாணவர்கள் அடைவு திறனும் நன்றாக வந்து கொண்டுள்ளது. எனவே பிஎம் ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் வழக்கமாக கொடுக்கும் நிதியை கொடுங்கள். இதுகுறித்து பின்னர் கூறுகிறோம் என தெரிவித்தோம்.
ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தில் கையொப்பமிட்டால் தான் நிதி தருவோம் என நெருக்கடியான சூழ்நிலையை உருவாகினர். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 2154 கோடி நிதியை தராமல் மிரட்டுவது போன்று செயல்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் காட்ட வேண்டாம் எனவும், மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என தெரிவித்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கூறப்பட்டுள்ளதை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்தோம். அதில் முன்மொழிக் கொள்கையும் தேசிய கல்விக் கொள்கையும் உள்ளே கொண்டு வருவதாக இருக்கிறது. முதலில் மாதிரி பள்ளிகள் என உள்ளே நுழைந்து பின்னர் மாநிலத்தில் உள்ள கல்வி முறையை மாற்றி விடுவார்கள் எனவும் புரிந்தது. அதனை தொடர்ந்து அந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தோம். தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் எல்லாம் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படவில்லை என கூறினால், அவர்கள் நம் மீது கருத்துக்களை திணிக்கலாம். ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தமிழகத்தின் கல்வி செயல்பாட்டை மாதிரியாக பார்ப்பதாகவும், பல திட்டங்களில் முன்னணியில் இருப்பதாகவும் அதனை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குஜராத்துக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா?: அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இருபது செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனர். அதில் முதல் இடத்தில் கேரளாவும், 19 செயல்பாடுகளை நிறைவேற்றி தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. 20 செயல்பாடுகளில் குஜராத் 8 செயல்பாடுகளிலும், உத்தர பிரதேசம் , மத்திய பிரதேசம் மூன்று செயல்பாடுகளிலும் பீகார் இரண்டு செயல்பாடுகளிலும் உள்ளன.
ஆனால் செயல்பாடுகளில் குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கிவிட்டு கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எல்லா மாநிலத்தில் உள்ள மாணவர்களும் படித்து நன்றாக வர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், கொள்கையை விட்டுக்கொடுத்து நிதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. கொள்கையை ஏற்றுக் கொண்டு நிதி தந்தால் தரட்டும்; இல்லையென்றால் அரசே அதற்கான செலவை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார். மாநில அரசை நம்பியுள்ள மாணவர்களை என்ன செலவானாலும் பார்த்துக் கொள்ளலாம் எனச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்ட வருகின்றனர். அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் இதற்கான நிதியும் ரூ.400 கோடி வழங்கப்படுகிறது. இந்த முறை அதற்கான நிதியும் நிறுத்தி உள்ளனர். இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம்.