திருநெல்வேலி: உயர் கல்வி பெறுவோரின் சதவீதம் மிகக் குறைவாக இருந்த காலத்திலேயே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பெண்கள் சாதித்துள்ளனர். தற்போது உயர் கல்வி பெறுவோரின் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால் பெண்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி ஸ்வீட் ஆனி கிரேஸ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று (பிப்.12) பெண்களுக்கான அறிவியல் சவால்கள் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ வளாகத்தில் உள்ள கிரையோஜெனிக் இன்ஜின் பிரிவின் இயக்குநர் ஸ்வீட் ஆனி கிரேஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் கல்லூரி மாணவிகளிடையே அறிவியல் தொடர்பாக உரையாற்றினார்.
தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பெண்கள், கல்லூரி மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து விளக்கினார். ஆனி கிரேஸ் கூறுகையில், '' அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். வெற்றிக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அதனை தாண்டி அவர்கள் முன்னேற வேண்டும். உலக அளவில் தற்போது வரை 1,012 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 64 பெண்கள் மட்டுமே நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடி மக்கள் மேய்க்கால் நிலம்; இனி ஒரு அடி கூட விவசாய நிலமாக மாற்றக்கூடாது - நீதிமன்றம்
நோபல் பரிசில் பெண்களின் பங்களிப்பு ஆறு சதவீதமாக மட்டுமே உள்ளது. உயர் கல்வி பெறுவோரின் சதவீதம் மிகக் குறைவாக இருந்த காலத்திலேயே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பெண்கள் சாதித்துள்ளனர். தற்போது உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பல்வேறு சாதனைகளை பெண்கள் படைக்க வேண்டும்'' என்றார்.
இந்த விழாவில் மாவட்ட அறிவியல் அலுவலர் முத்துக்குமார் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.