புதுடெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ஆட்சியை பாஜக கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இலவச திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி டெல்லி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இலவச மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தி வந்தது. பாஜக தலைமையிலான ஆட்சியில் இந்த திட்டங்கள் நிலை குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை.
இலவசங்கள் குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஏற்கனவே டெல்லியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
டெல்லியில் பாஜக தலைமையில் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்க வழி வகுக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும் முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த திட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் மேலும் ரூ.5 லட்சம் வரம்பு அளிக்கப்படும்.
வல்லுநர்கள் சொல்வது என்ன?
நிதி நிலைத்தன்மை, மக்களுக்கு நலன் அளிக்கும் திட்டங்கள் இரண்டுக்கும் இடையே புதிதாக அமைய உள்ள பாஜக அரசு செயல்பட வேண்டி இருக்கிறது. இது குறித்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், ஏற்கனவே உள்ள இலவச திட்டங்களை பாஜக தொடர்ந்து செயல்படுத்தும். அதே நேரத்தில் மேலும் புதிய திட்டங்களை செயல்படுத்தக் கூடும். "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இப்போது இது ஒரு நிர்பந்தமாக ஆகி விட்டது. டெல்லியில் ஆம் ஆத்மி மேற்கொண்ட இந்த பாணி மிகவும் அபாயமானதாகும். இலவச திட்டங்கள் அடிப்படையில் இன்னும் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். தங்களது சொந்த கொள்கைகளுடன் கூடிய நலத்திட்டங்களை பாஜக செயல்படுத்தக் கூடும்,"என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலவச திட்டங்களின் அடிப்படையில் மட்டும் அரசு செயல்படக் கூடாது. வேலைவாய்ப்பு, சமூக நல்லிணக்கம், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் ஓன்ற செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.
இது குறித்து பேசிய அரசியல் நிபுணரும், பத்திரிகையாளருமான நாவல் கிஷோர் சிங்,"ஆம் ஆத்மியின் நலத்திட்டங்களை பாஜக நிறுத்துவது சிக்கலாக இருக்கும். 5 முதல் 10 ஆண்டுகளாக பலன்களை பெற்று வந்த மக்களுக்கு , அது அவர்களின் வாழ்வாதாரமாகவே மாறி விட்டது. பாஜக இலவச திட்டங்கள் குறித்து விமர்சனங்கள் செய்தது. ஆனால், விவசாயிகள் வங்கி கணக்கில் பண பலன்களை அளிப்பது போன்ற அதே பலன்களை அளித்து வருகிறது. ஆம் ஆத்மியின் முயற்சிகளைத் தொடரும் நிலையில் சொந்தமாகவும் சில திட்டங்களை பாஜக செயல்படுத்தும்,"என்றார்.
இது குறித்து பேசிய ஜகதீஷ் மம்கைன், 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற மேலும் சில பலன்களை தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதி கொடுத்தது. எனினும், ஆனால், அவற்றை அமல்படுத்துவது என்பது புதிய முதலமைச்சரின் கண்ணோட்டம், அதற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்குமா என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.இப்போது பாஜக அரசு அமைந்திருக்கிறது. எங்கிருந்து பணம் கிடைக்கும் என்பதை அது கண்டுபிடிக்க வேண்டும்,"என்றார்.
பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவற்றுமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும். டெல்லியின் நலத்திட்ட கொள்கைகள் குறித்த மாநில மக்களின் எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுகிறது.
பாஜக அளித்த வாக்குறுதிகள்
ஏற்கனவே உள்ள திட்டங்கள் தொடரும் என பாஜக வாக்குறுதி அளித்திருக்கிறது. புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
மகிளா சம்ருதி யோஜனா: ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை வழங்கப்படும்.
முக்ய மந்திரி மாத்ரித்வா சுரக்ஷா யோஜனா: ரூ.21,000 மற்றும் கர்ப்பிணிகளுக்கு 6 ஊட்டசத்து பெட்டகங்கள்
எல்பிஜி எரிவாயு சிலிண்டர் ரூ.500: ஹோலி, தீபாவளி பண்டிகையின் போது ஏழை குடும்பங்களுக்கு ஒரு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
இலவச மருத்துவ சேவைகள்: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை, அத்துடன் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள், இலவச வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான பென்ஷன் அதிகரிக்கப்படும்: 60-70 வயதான மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் தொகை ரூ.2000த்தில் இருந்து ரூ.2500 ஆகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.2500ல் இருந்து ரூ.3000 ஆகவும் வழங்கப்படும்.
குறைந்த விலையில் உணவு: அடல் கேன்டீன்கள் உருவாக்கப்பட்டு ரூ.5க்கு உணவு வழங்கப்படும்.
டெல்லியில் உள்ள அரசு கல்வி நிலையங்களில் அங்கன்வாடி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி பெறுவதற்கான தி்ட்டம்.
போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவி: ரூ.15,000 நிதி உதவி, பயணம் கட்டணம், விண்ணப்ப கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
டாக்டர் அம்பேத்கர் நிதி உதவி திட்டம்: பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பெற ரூ.1000 மாத உதவித் தொகை வழங்கப்படும்.
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் விரிவாக்கம்: இந்த நிதி உதவி முயற்சியின் கீழ் தெரு ஓர வியாபாரிகளுக்கு இருமடங்கு பலன்கள் அளிக்கப்படும்.