கோயம்புத்தூர்: பேருந்து விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உயிரிழந்த மாணவரின் தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கண் உள்ளிட்டவை அவரது பெற்றோர்களின் ஒப்புதலின் படி தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம் சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று (பிப்ரவரி 07) அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் மேற்கொண்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ஊத்துக்குளி அடுத்த ஊமச்சி வலசு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து அனிதா தம்பதியின் மகன் குருராஜ் (18) படுகாயமடைந்துள்ளார். இவர் பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விபத்தில் படுகாயமடைந்த நிலையில், இவர் கோவை பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குருராஜ் இன்று (பிப்ரவரி 08) மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது பெற்றோர்கள் குருராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர். அதன்படி, பெற்றோர்களின் ஒப்புதலின் பேரில், குருராஜின் இதயம், நுரையீரல், கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குருராஜ் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பக்தவட்சலம் மற்றும் ஊழியர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். பிறகு, குருராஜின் உடலை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சொந்த ஊருக்குச் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்த மாணவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும்.
இது குறித்து உயிரிழந்த மாணவரின் தாயார் அனிதா கூறுகையில், “மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம். குழந்தைகளை நம்பி பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர் என்பதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் குறித்து தனியார் மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் கூறுகையில், “மாணவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவை பயனலிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இதனால், அவரது உடல் உறுப்புகளான இதயம், கண், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் பெற்றோர்கள் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டுள்ளது. இதனால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர், அதை காட்டிலும் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.