சென்னை: காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு எச்எம்பிவி ( HMPV ) வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (எச்எம்பிவி-HMPV) என்ற புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில், இந்தியாவில் முதன்முதலாக கர்நாடகா மாநிலத்தில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வைரஸின் தீவிரத்தன்மை குறித்தும், சீனாவில் பரவும் வைரஸ் தான் இதுவா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ICMR உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, சிகிச்சையில் இருந்த 3 மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த 8 மாத குழந்தைக்கும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி; 3 குழந்தைகளுக்கு பாசிட்டிவ்!
இந்த நிலையில் சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வைரஸ் பாதிப்புக்கு உள்ளான இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் துறை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கர்நாடகாவில் 2 , குஜராத்தில் 1 குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மற்றும் சேலத்தில் 2 பேருக்கு என தமிழகத்தில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.