சென்னை: சென்ட்ரல் பகுதிியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பில், தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 14) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், சென்ட்ரல் கோபுரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு செய்திக்குறிப்பில், “சென்னை சென்ட்ரல் பகுதியை உலகத்தரம் வாய்ந்த அடையாளமாக மேம்படுத்தும் நோக்கில், மத்திய சதுக்கத் திட்ட கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் சென்ட்ரல் ரயில் முனையம், பூங்கா ரயில் நிலையம், பூங்கா நகர் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பெருநகர சென்னை மாநகராட்சி, தென்னக ரயில்வே தலைமையகம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கிடையே பொதுமக்கள் எளிதில் சென்றுவருவதற்கு ஏதுவாக, மத்திய சதுக்கம் போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.
🏢 சென்னையின் மற்றுமொரு அடையாளச் சின்னமாக 27 அடுக்குமாடிகளுடன் உயர்ந்து எழ இருக்கும் #CentralTower கட்டடத்திற்கு அடிக்கல்
— M.K.Stalin (@mkstalin) February 14, 2025
🏫 மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், நூலகக் கட்டடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு
🎓… pic.twitter.com/bw8sGQ3JyH
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சமவீத பங்களிப்புடன், கூட்டு முயற்சி அடிப்படையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டுமான பணிகளைச் செயல்படுத்தவுள்ளது.
சென்ட்ரல் கோபுரக் கட்டடம்:
சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடம் 14 ஆயிரத்து 280 சதுர மீட்டர் நிலப்பரப்பளவில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 4 அடித்தளங்களுடன், தற்போது கட்டப்படவுள்ள தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடிகளுடன் (120 மீட்டர் உயரம்) அமைக்கப்படவுள்ளது. தரைதளம் முதல் 4-வது தளங்கள் வரை சில்லரை மற்றும் வணிக பயன்பாடு, 5 முதல் 24 தளங்கள் வரையில் அலுவலகங்களுக்கான பயன்பாடு, 25-வது தளம் சேவைகளுக்காக, 26 மற்றும் 27-வது தளங்கள் வணிக நோக்கத்திற்காக கட்டமைக்கப்படவுள்ளது.
இதற்கான, ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள Renaatus projects private நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவை நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கிய திட்டமாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு இந்த கட்டடம் அமைக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சித்திக், இயக்குநர் அச்சுதன் மற்றும் Renaatus Project private நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மனோஜ் பூசப்பன் ஆகியோர் கையெழுத்திட்டு கடிதம் ஏற்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.