ஐதராபாத்:தினசரி வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் தலைவலி ஏற்பட்டாலே அனைத்து வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து படுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், இரண்டு மூன்று நாளைக்கு தொடரும் மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி வந்தால் என்ன செய்வது?.
பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலிப்பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. சாதாரண தலைவலியைப்போல இல்லாமல் வாந்தி, குமட்டலுடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட தலைவலியை எவ்வாறு தடுக்கலாம் என்றால், மைக்ரேன் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற முதலில் உணவுப் பழக்கத்தில் சில மாற்றஙகளைச் செய்ய வேண்டும் என்கிறார் பிரபல உணவியல் நிபுணர் ஸ்ரீலதா. பழங்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலமாகவும் பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் காஃபின்(Caffine) பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் தலைவலியை தவிர்ககலாம் என பரிந்துரைக்கிறார்.
உணவே மருந்து: காலை உணவை தவிர்ப்பது என்பது தலைவலிக்கு பிடித்தமான ஒன்று என்கிறார் மருத்துவர். குறிப்பாக, ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் காலையில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். சாதாரணமாகவே, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருந்தால் தலைவலி எட்டிப் பார்க்கும் நிலையில் மைக்ரேன் பிரச்சனை உள்ளவர்களுக்கு கூடுதலாக எரிச்சலை தூண்டி கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள்:மீன், பருப்பு மற்றும் விதைகள் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் ஒற்றை தலைவலியை தவிர்க்கிறது. குறிப்பாக, ஒற்றை தலைவலி உடையவர்கள் அதிகமான தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.