உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் பலவிதமான பழங்களைச் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். அவற்றில் ஒன்று தான் சூப்பர் ஃப்ரூடான, கிவி பழம். பல்வேறு வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்தால் நிறைந்துள்ள கிவி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம் என்கின்றனர். இந்நிலையில், கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: கிவியில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, பல்வேறு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. ஆரஞ்சு பழத்தை விட கிவியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்: கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்குவதோடு மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். குடல் இயக்கத்திற்கு வழிவகுப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு ஒரு முதல் இரண்டு முறை கிவி பழத்தை சாப்பிடுங்கள்.
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது: கிவியில் ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பண்புகளாகும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்திற்கு நன்மை பயக்கும்: கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் கொலாஜன் உற்பத்திக்கும் உதவுகிறது. இது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதுமட்டுமல்லாமல், வயதான தோற்றத்தை தடுப்பது மற்றும் சருமத்தின் பளபளப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்.
சிறந்த தூக்கம்: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் கிவி சாப்பிட்டு வர, நல்ல மாற்றம் கிடைக்கும். ஏனெனில் இந்தப் பழத்தில் செரோடோனின் அதிகம் உள்ளது. இது நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி நல்ல தூக்கத்தை தர உதவி செய்யும்.
இது தவிர, கிவியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான பழமாக இருக்கிறது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக, கிவி நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஆயுளை அதிகரிக்கும் 7 பழங்கள்..தினசரி உணவில் கட்டாயம் சேருங்கள்! வயிறு கோளாறுகளை தீர்க்கும் சோம்பு..எப்படி, எப்போது சாப்பிடலாம்? |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.