கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இங்கு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வபோது குடியிருப்பு பகுதிகளில் புகுந்தும், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் தாக்கி வருகின்றன.
இதனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக, வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை ஒன்று வழிமறித்துள்ளது. வால்பாறை அருகே உள்ள சோலையார் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அவ்ழியாக ஒற்றை காட்டி யானை வந்துள்ளது. இதனைக் கண்டு பேருந்து ஓட்டுநர் பேருந்தை தூரமாக நிறுத்திவிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு யானை சலையை கடந்து சென்று விட்டது.
இதையும் படிங்க: காட்டு யானை 'டென்சி'.. ரெண்டு வருஷத்துக்கு முன்பு.. வால்பாறை சம்பவத்தின் பின்னணி!
இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்து சென்றுக் கொண்டிருக்கும் போது காட்டு யானை குறுக்கே வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “தற்போது வால்பாறை பகுதிகளில் அதிக அளவில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளை புகைப்படம், வீடியோ எடுக்க அருகே செல்லக்கூடாது. அதனை மீறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் மீண்டும் வால்பாறை பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.