சென்னை: தங்கத்தின் விலை அண்மையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.8060-க்கும் சவரன் ரூ.64,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16,000-க்கு மேல் உயர்ந்தது. கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,150 ரூபாயாகவும், சவரன் ரூ.58,200 ஆகவும் இருந்தது. ஆனால் 42 நாட்களில் அதாவது நேற்று வரை ஒரு கிராமுக்கு 910 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் உயர்வை கண்டு வந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.120 குறைந்து, ரூ.7ஆயிரத்து 940 க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520 விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியை பொருத்தவரை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.