ஈரோடு: அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
செங்கோட்டையன் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்கள் இடம்பெறவில்லை. என்னிடத்தில் கலந்து ஆலோசனை செய்திருந்தால், இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன் என விழாக்குழுவினரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அதற்கு அடித்தளமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்ச்ர் ஜெயலலிதா. எனவே அவரது படம் அவசியம் இடம் பெற வேண்டும் என்று விழாக்குழுவினரிடம் கூறினேன். ஆனால், இந்த காரணத்துக்காக நான் விழாவை புறக்கணிக்கவில்லை'' என்றார்.
இருப்பினும் இப்பிரச்சனை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இரு காவலர்கள் அடங்கிய குழுவினர், ஈரோடு குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வண்டலூரில் சோகம்... நள்ளிரவில் தண்டவாளத்தில் கிடந்த சடலங்கள்.. போலீஸ் அதிர்ச்சி தகவல்!
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று (பிப்.12) அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவரை காண அவர் இல்லத்தின் முன்பு குவிந்தனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், அந்தியூர் பகுதியில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு அழைக்க அ.தி.மு.க நிர்வாகிகள் வந்ததாகவும், ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தினமும் கட்சி நிர்வாகிகள் தன்னை சந்திக்க வருவதாகவும் இது வழக்கமாக நடைபெறும் ஒன்று எனவும் கூறினார்.