சென்னை: தமிழகத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை (பிப்.13) முதல் தொடங்கி பிப்.28ம் தேதி வரை நடைபெற உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தொழுநோய் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சிறப்பு முகாம்கள் மூலம் ஆண்டுதோறும் கணிசமான நபர்களுக்கு ஆரம்ப நிலையிலே இந்தோயின் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் தீவிர பாதிப்பு தடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு தொழுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய 37 மாவட்டங்களில் உள்ள 133 கிராம தொகுதிகள் மற்றும் 27 நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பிப்ரவரி 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் முகாமில் (LEPROSY CASE DETECTION CAMP -2025) கிராம பகுதிகளில் 18,192 முன்களப் பணியாளர்களும், நகர் பகுதியில் 4,332 முன்களப் பணியாளர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொழுநோய் என்றால் என்ன?: தொழுநோய் (Leprosy) என்பது, மைக்கோபாக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும். 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த நோய் குணப்படுத்தப்படும். உணர்ச்சியற்ற அடர்நிற தேமல் தொழுநோயின் முதன்மையான அறிகுறியாக இருக்கிறது.
தொழுநோய் பாதிப்பை ஆரம்ப காலத்தில் கண்டறிவதன் மூலம் 100 % குணப்படுத்த முடியும் எனவும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் புறநரம்புகள் சம்பந்தப்பட்ட கண், கை மற்றும் கால்களில் குறைபாடு ஏற்படத் தொடங்கும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது
- இதையும் படிங்க: மாடுகளை பாதிக்கும் பெரியம்மை (Lumpy virus) நோயிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு! CDSCO-வின் ஒப்புதலை பெற்றது!
அறிகுறிகள் என்ன?: தொழுநோயின் ஆரம்ப கால அறிகுறியகள் பின்வருமாறு:-
- சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல்
- சூடு
- நீண்ட நாட்களாக ஆறாத புண்
- காது மடல் தடித்திருத்தல்
- கை மற்றும் கால்களில் மதமதப்பு
- புருவமுட இல்லாமல் இருத்தல்
- உடலில் முடிச்சு முடிச்சாக காணப்படுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்பகால தலையீடு தரும் நன்மைகள்: தொழுநோய் ஆரம்ப காலத்தில் கண்டறியப்படுவதால் ஊனம் தடுக்கப்படும். மற்றவர்களுக்கு இந்நோய் பரவுவது தடுக்கப்படும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்போர், உடன் பணிபுரிவோர், அருகில் வசிப்போருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்.
தொழுநோயாளிகள் பாதிப்பு விவரங்கள்: இந்தியா முழுவதும் 10 ஆயிரம் மக்கள்தொகையில், 0.6 % மக்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, 0.27% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. |
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 53.4% பெண்களுக்கு இரத்த சோகை..தடுக்கும் வழி என்ன?