கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அதற்காக, சூளகிரி அருகே நல்லகானகொத்தபள்ளி, கோனேரிப்பள்ளி, குண்டுகுறுக்கி, கொரகுறுக்கி, வரதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் இரண்டு போக பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. இதனை நம்பி நல்லகானகொத்தபள்ளி, குண்டுகுறுக்கி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விளை நிலங்களிலும் சிப்காட் அமைக்க அரசு முயன்று வருவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (பிப்.12) தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் சூளகிரி பகுதி விவசாயிகள் 200க்கும் அதிகமானோர் சூளகிரி ரவுண்டானா முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு பெங்களூரு ஐஐஎம்-இல் சிறப்புப் பயிற்சி!
பேரணியின் போது "சோறு போடும் விவசாயத்தை கூறு போடாதே... சாப்பாடு தரும் நிலத்தில் சாப்ட்வேர் எதற்கு" என உணர்சி மிக்க கோஷங்களை எழுப்பினர். காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சிப்காட் நில எடுப்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈசன் முருகசாமி, ''நிலம் எடுக்க ஆட்சேபனை செய்பவர்களிடம் நிலம் கையகப்படுத்தாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த பகுதியில் விளைநிலம் விற்கவும், வாங்கவும் முடியாத நிலையில் அவற்றை ஜீரோ மதிப்பாக மாற்றி உள்ளதை அரசு விடுவிக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு 2 சிப்காட் போதும் என்கிற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஏமார்ந்தவர்கள் என்கிற முறையில் இதுவரை 7 சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைத்துள்ளனர். இதில் வேலை செய்பவர்கள் வெளியூர்காரர்கள், தொழில் தொடங்குபவர்கள் கார்ப்பரேட்டுகள் என்பதால் இனி புதியதாக தொழிற்பேட்டைக்கள் அமைக்க கூடாது'' என்றார்.