அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. 357 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டாம் பென்டன், கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த அபார வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.