சென்னை: சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி 2025-யை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று (பிப்.12) துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றத்தை 2022ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் துவங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், ''ஏன் எதற்கு எப்படி என்ற சிந்தனையுடன் இருந்தால் தான் மாணவர்களின் கல்வி முழுமையடையும்'' என கூறினார்.
மாணவர்கள் கண்டுபிடிப்பு
நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் அறிவியல் பாடம் என்பது தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் இல்லை வாழ்க்கைக்கான பாடம் என்று கூறியிருக்கிறார். இந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. ஒரு மாணவரின் தங்கை டெங்குவால் பாதிக்கப்பட்டதால் அவர் கொசுவை அழிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
![அறிவியல் கண்காட்சி 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/tn-che-01a-school-education-minister-script-vedio-photo-7204807_12022025143644_1202f_1739351204_582.jpeg)
5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியவன் தமிழன் என்று முதலமைச்சர் உலகிற்கு பிரகடனப்படுத்தினார். அரசுப் பள்ளியில் படித்தது வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்று சொல்ல வேண்டும். அரசு பள்ளிகளின் மீது நமது அரசாங்கம் செய்துள்ள முதலீடு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காகும். இதில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, '' ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என நாங்கள் கூறுவது பொய் என தொடர்ந்து அண்ணாமலை தெரிவித்து வருகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொய் சொல்வாரா? பள்ளி மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய நாங்கள் எப்படி பொய்யான தகவலை கூறுவோம்? ஒன்றிய அரசு கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் தான் கூறுகிறோம்.
![அறிவியல் கண்காட்சி 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/tn-che-01a-school-education-minister-script-vedio-photo-7204807_12022025143644_1202f_1739351204_739.jpeg)
இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் வியூகம் அவருடைய மாநிலத்தில் அவருக்கே 'வொர்க் அவுட்' ஆகவில்லை - செல்வப்பெருந்தகை பேட்டி!
மாணவர்களின் எதிர்காலம் தான் முக்கியம். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதில் அரசியல் செய்ய வேண்டாம். பலமுறை டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை மாநில அரசுக்கும், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கும் 2,150 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசிடம் பெற்று தரலாமே? ஒன்றிய அரசின் சார்பில் வெளியிட்டுள்ள தரவுகளை பார்த்துவிட்டு, தமிழ்நாடு அரசு செய்தவற்றையும், செய்யாதவற்றையும் கூறுங்கள். ஒன்றிய அரசின் போக்கிற்கு ஒத்து பாேவது போல் தான் உள்ளீர்களே தவிர தமிழ்நாடு மாணவர்களுக்காக எதுவும் செய்யவில்லை.
வெயிட் அண்ட் சீ!
பள்ளிக் கல்வியின் தரம் குறித்து ஆளுநர் ஒன்றை கூறி வருகிறார். அண்ணாமலை அறிக்கை என ஒன்றை வெளியிட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு ஒரு அறிக்கையை கொடுக்கும். தமிழ்நாட்டில் இருந்து 10 லட்சம் மாணவர்களுடைய தரவுகளை எடுத்து அரசாங்கம் ஒரு அறிக்கையாக தரும். வெயிட் அண்ட் சீ. எங்களுடைய தரவுகள் பேசும்.
பள்ளியில் பாலியல் குற்றம்
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் 238 ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 36 பேர் வெளியிலும், சிறையிலும், 11 பேர் குற்றம் நிரூபிக்க முடியாமல் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர். 46 பேர் மீது மார்ச் மாதம் 10 ந் தேதி இறுதி உத்தரவும், 56 பேர் மீது விசாரணை நடைபெற்றும் வருகிறது.
'மாணவர் மனசு' பெட்டி வைத்து அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ரகசியமாக வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளோம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.