சென்னை: மாநிலங்களவை பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் அந்த பதவி தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து மதிமுக சார்பில் இருந்து எந்த கோரிக்கைகளும் வைக்கபடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் குடியரசு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,"கவிஞர் குடியரசுவின் பாட்டு, கவிதைகள், மேலும் அவர் திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அவரை, மதிமுக தலைமை நிர்வாகிகளில் ஒருவராக நியமித்தோம்.
நான் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தபோது கூட்டத்தொடர்களில் பங்கேற்கும்போது, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான பிரச்னை குறித்து கேள்வி எழுப்பாத நாட்களே இல்லை. இந்திய அரசின் மெத்தன போக்கினால் மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது என தொடர்ந்து விரும்பத் தகாத நிகழ்வுகள் நடப்பது வருத்தமாக உள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராகிறாரா கமல்ஹாசன்? அமைச்சர் சேகர்பாபு 'திடீர்' சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளாததால் இலங்கை கடற்படையினர் தினந்தோறும் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்கின்றனர். மீனவர்களின் படகுகளை ஏலம் விடுகிறார்கள். சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். தமிழ்நாடு மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை.
டெல்லி யூனியன் பிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துப் போட்டியிட்டிருந்தால் இந்தத் தேர்தல் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். இந்தியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.
எனது மாநிலங்களவை பதவி காலம் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இதுதொடர்பாக மீண்டும் எங்கள் தரப்பில் இருந்து திமுகவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை." என்று வைகோ கூறினார்.