சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், "தமிழக காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு திட்டத்தின்படி, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துகின்ற வகையில் மாவட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் படிவங்கள் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் மாவட்டத்தில் 100 சதவீதம் பூர்த்தி செய்து தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் 40 சதவீதம் நிறைவு செய்து இருகிறார்கள். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியலுக்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். உச்சநீதிமன்றம் எதற்காக அதை தடை செய்தது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அரசியலுக்காக பேசுகிறார். இதுவரை மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்காமல் இருப்பது ஏன்? தமிழக அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இன்று பேசும் அன்புமணி, இதே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கேட்டிருக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவு செய்து இருக்கிறது. திமுகவை விட யாரும் நல்லாட்சி தர முடியாது. இன்னும் ஒரு மாதத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவத்தில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன். கடந்த அதிமுக ஆட்சியில் காலத்தில் கஜானாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டார்கள். அரசு கஜானாவில் பணம் இல்லை. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லை. ஆனால் திறமையான நிதி மேலாண்மையால் திமுக அரசு ஆட்சியை நடத்துகிறார்கள். தவெக தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம். பிரசாந்த் கிஷோர் வகுக்கும் திட்டத்தால் மக்கள் வாக்களிக்கவில்லை, மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நலத் திட்டங்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
பிரசாந்த் கிஷோர் வியூகம் அவருடைய மாநிலத்தில் அவருக்கே வொர்க் அவுட் ஆகவில்லை, பிறகு எப்படி விஜய்க்கு உதவ போகிறது? அதிமுக உட்கட்சி விசாரணையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில், பாஜகவின் சித்து விளையாட்டு உள்ளது. அதிமுகவை பயப்படுத்த தான் இதுபோன்ற வேலைகளை பாஜக செய்கிறது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராகிறாரா கமல்ஹாசன்? அமைச்சர் சேகர்பாபு 'திடீர்' சந்திப்பு! - MINISTER SHEKAR BABU KAMAL MEET
நாளையே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டால், இதையெல்லாம் விட்டுவிட்டு இரட்டை இலை முடக்கப்படாது, உட்கட்சி விவகாரத்தில் ஆணையம் தலையிடாது என்று சொல்வார்கள்" என கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.