புதுடெல்லி: தேர்தலுக்கு முன்பாக இலவச திட்டங்கள் குறித்து அறிவிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலவச ரேஷன் பொருட்கள், ரொக்க தொகை பெறுவதால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வீடில்லாதவர்களுக்கு வீடு உரிமை வழங்க வேண்டும் என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி கவாய், "இது போன்ற இலவச திட்டங்கள் காரணமாக, எதிர்பாரத விதமாக மக்கள் வேலைக்கு செல்வதற்கு தயாராக இல்லை. அவர்கள் இலவச ரேஷன் பொருட்கள் பெறுகின்றனர். எந்த ஒரு வேலையும் செய்யாமலேயே ரொக்கத் தொகையையும் அவர்கள் பெறுகின்றனர்,"என்றார்.
"மக்கள் மீதான உங்கள் கவலைகள் உண்மையில் மிகவும் பாராட்டத்தக்கது. சமூக நீரோட்டத்தில் ஒரு பகுதியாக அவர்களை இது போன்ற திட்டங்கள் மாற்றாது. தேசத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்பதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்," என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி, "நகர்ப்புற ஏழ்மை நிலையை அகற்றுவதற்கான இயக்கத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வீடின்றி இருக்கும் மக்களுக்கு குடியிருப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண்பதாக இந்த இயக்கம் இருக்கும்," என்றார்.
இதையும் படிங்க: 'மீண்டும் தர்மமே வெல்லும்'... இபிஎஸ் மனு தள்ளுபடி! ஓபிஎஸ் வரவேற்பு!
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியிடம்,"நகர்புற ஏழ்மை நிலையை அகற்றுவதற்கான இயக்கம் எப்போது தொடங்கப்படும் என்பதை மத்திய அரசிடம் கேட்டுச் சொல்லுங்கள்," என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.