தேனி: "பிரசாந்த் கிஷோர் ஆலோசனை அளித்து திமுக வெற்றி பெறவில்லை; மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம் என்றும், தேர்தலில் வெற்றி பெறும் அளவிற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்குகள் இல்லை." என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிரிக்கெட் மைதானம் மற்றும் 10 லட்சம ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி கால்பந்து விளையாடி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான் தொடரும்.
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பு. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாதது அந்த இயக்கம் இல்லாமல் போய்விட்டதற்கு சமம். இனி வரக்கூடிய தேர்தலில் அதிமுக இருக்குமா, இருக்காதா? என்பது சந்தேகமே.
கடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம். 200 தொகுதி இலக்கு என்று சொல்லியுள்ளோம் ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
சினிமா வேறு; அரசியல் வேறு என்று மக்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். அதனால் வெற்றி பெறும் அளவிற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்குகள் இல்லை." என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது தான் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தொடர்ந்த கூறிவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.