பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் ஏஐ செயல்பாடு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார். அப்போது ஏஐ மூலமாக இந்தியாவில் அளவு கடந்த வாய்ப்பகளை கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமருடனான சந்திப்பின் போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் குறித்து இந்தியா-கூகுள் நிறுவனம் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து விவாதித்தார்.
பாரீஸ் நகரில் நடபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடு உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் இணைந்து பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். இதன் பின்னர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாரீசில் நடைபெறும் ஏஐ செயல்பாடு உச்சிமாநாட்டுக்கு இடையே இன்றைக்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அளவு கடந்த வாய்ப்புகளை கொண்டு வருவது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் குறித்து இரு தரப்பிலும் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை செய்தோம்," என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராகிறாரா கமல்ஹாசன்? அமைச்சர் சேகர்பாபு 'திடீர்' சந்திப்பு!
பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சென்ற போது சுந்தர் பிச்சையை நியூயார்க்கில் அவர் சந்தித்து பேசினார். பாரீஸ் நகரில் நடந்த ஏஐ செயல்பாடு உச்சி மாநாட்டில் நேற்று அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
உச்சி மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, "பாரபட்சம் அற்ற, வெளிப்படையான, விரிவான நம்பிக்கையின் பேரில் ஓபன் சோர்ஸ் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவில் ஒரு உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒன்றிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
உபயோகம் கொண்டதாக, விளைவுடன் கூடியதாக உள்ளூர் சூழலில் நிலைத்திருக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திகழ வேண்டும். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நூற்றாண்டின் தனிமனிதனின் தலையெழுத்தை எழுதுகிறது. ஏஐ காலத்தின் தொடக்க காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். மனிதநேயத்தின் போக்கை வடிவமைப்பதிலும் அது முக்கிய பங்கு வகிக்கிறது,"என்று வலியுறுத்தினார்.