கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குண்டம் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த நிலையில், நேற்று மயான பூஜைக்காக நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர். சயன கோலத்தில், மாசாணியம்மனின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு ஒரு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. மயான அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியபடியே பட்டுச்சேலையில் பிடி மண்ணினை எடுத்தார். பின்னர் மயான பூஜை பின்னிரவு 3 மணிக்கு நிறைவடைந்தது.
வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு பணியல் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: இரண்டாவது நாளாக மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி!
முன்னதாக, ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில், வள்ளி, கும்மியாட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நாளை மறுநாள் (பிப்.14) மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோயில் நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.