சென்னை: இலங்கை பெண் பயணியிடம் இருந்து தாலி செயினை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரியின் செயல்பாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா கடந்த 2023ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்த, மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, சோதனையில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், தனுஷிகா அணிந்திருந்த தங்கத்தினால் ஆன, தாலி செயின் பெரிதாக இருப்பதாக கூறி அதனை பறிமுதல் செய்தனர்.
அப்போது தனுஷிகா, தமக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது என்றும், தாலி செயின் உள்ளிட்ட நகைகள் தாம் தினந்தோறும் அணிபவை என்றும் விளக்கம் அளித்தார். எனினும் அதை பொருட்படுத்தாமல் அவரது தங்கத்தினால் ஆன தாலி செயினை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷிகா தாக்கல் செய்த மனுவில், "விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் சுங்கத் துறையினர் என்னிடம் கொடூரமாக நடந்து கொண்டனர். என்னிடம் இருந்து பறிமுதல் செய்த தாலி செயினை மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு சுங்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், அவர் தங்க நகை அணிந்து கொண்டு விமான நிலையம் வழியே இந்தியாவிற்குள் வர முடியாது. தங்க நகையை பையிலும் எடுத்து வர முடியாது. எனவே தான் தனுஷிகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது,"என வாதிட்டார்.
இதையும் படிங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் இப்போது 'Famous' - நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தாலி செயினை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி "தாலியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல், அதிகாரி அதை பறிமுதல் செய்துள்ளார். தாலி அணிந்திருப்பது, இந்த நாட்டின் கலாசாரம். அதை கழற்றும்படி ஒரு பயணியிடம் கூறுவதும், வலுக்கட்டாயமாக பறிப்பதும், இந்திய நாட்டின் கலாசாரத்தையும், இந்து மத நடைமுறைகளையும் நிர்மூலமாக்குவதாகும்.
எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த அதிகாரி, கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பது போல இருக்கிறது. எனவே, இது குறித்து சுங்கத்துறை முதன்மை ஆணையர் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை விடுவிக்க வேண்டும்.
நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண் 11 பவுனில் தாலி செயின் அணிந்திருப்பது சகஜமான நடைமுறை தான். எனவே, சோதனை நடத்தும் அதிகாரிகள், மதம் தொடர்பான நடைமுறைகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். சுங்கம் தொடர்பான சட்டத்தில் பயணிகள் அணிந்திருக்கும் நகைகளுக்கு விலக்கு அளித்துள்ளது என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்,"என்று உத்தரவிட்டார்.