சென்னை: சென்னையில் இருந்து 89 பேருடன் இன்று காலை கொச்சிக்கு புறப்பட்ட விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறால் வானில் பறக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், கோளாறு சரிசெய்யப்பட்டு, 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் கொச்சிக்கு புறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சி செல்லும் ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) தனியார் பயணிகள் விமானம், இன்று (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு, 84 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 89 பேருடன் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து, விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கிய போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
தொடர்ந்து, விமானம் வானில் பறந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தியுள்ளார். இதையடுத்து, விமானம் இழுவை வண்டி மூலம் இழுத்து வரப்பட்டு விமானம் புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு 4 ஸ்டாப்; கேரளாவுக்கு 14ஆ? எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில்லாமல் குமுறும் திருப்பூர் மக்கள்!
அதன் பின்னர் விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக, இன்று காலை 8:30 மணிக்கு மீண்டும் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.