நீரிழிவு நோயாளிகள், இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது மிகவும் அவசியம். இதற்காக, ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்த நிலமையை மாற்றி வீட்டிலிருந்தவாறே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கணக்கீட, குளுக்கோமீட்டர் (Glucometer) எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இதை இன்னும் கொஞ்சம் கூட எளிமையாக்கும் வகையில், மணிக்கட்டில் அணியும் கருவி மூலம் சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு அவர்களின் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க உதவுவதற்காக, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் புது தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த-சர்க்கரை அளவைக் கண்காணிக்க அடிக்கடி தங்கள் விரல்களைக் ஊசியால் குத்த வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் வாட்டர்லூவின் எலக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையின் துணைப் பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் ஷேக்கர் மற்றும் ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம், வழக்கமான இந்த செயல்பாடை நீக்குகிறது. இதனால் வலி, தொற்று அபாயம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துகிறது.
'நாங்கள் உருவாக்கியுள்ள ரேடார் தொழில்நுட்பம் ஸ்மார்ட் வாட்ச் உள்ளே பொருத்த முடியும் மற்றும் முன்பை விட குளுக்கோஸ் அளவை மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்," என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஷேக்கர். 'பார்வையை மேம்படுத்த கண்ணாடிகளைப் பயன்படுத்துவதைப் போலவே, இந்த தொழில்நுட்பம் குளுக்கோஸ் அளவை நன்றாக உணர உதவுகிறது' என்றார்.
இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்க, பூமியின் வளிமண்டலத்தை கண்காணிக்க ரேடாரைப் பயன்படுத்தும் வானிலை செயற்கைக்கோள்களை சுட்டிக்காட்டுகிறார் ஷேக்கர். "ரேடார் தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் சுனாமி மற்றும் புயல்களைக் கண்டறிய செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சரிபார்க்கவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இந்த ரேடார் அமைப்புகளை சிறியதாக்கி அவற்றை அணியக்கூடிய சாதனத்தில் வைப்பதற்கும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பார்க்கும் அதே ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்பதற்கும் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
"கணினியின் முக்கிய கூறுகள் ஒரு ரேடார் சிப் ஆகும், இது உடல் வழியாக சிக்னல்களை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது. மேலும், உடலில் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட இது கண்டறியும் என்கிறார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் இந்த கருவியை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"
மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்?: தற்போது யுஎஸ்பி உதவியுடன் இயங்கி வரும் இந்த சாதனம் முழு அளவிலான போர்ட்டபிள் பேட்டரி மூலம் செயல்படும் வகையில் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் இரத்த அழுத்தம் மற்றும் குளுக்கோஸ் அளவுகள் போன்ற பிற உடல்நலம் தொடர்பான தரவுகளையும் கண்காணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், "தற்போது மக்கள் அணியக்கூடிய பொருட்களில் இந்த தொழில்நுட்பத்தை நிறுவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.
இதையும் படிங்க: 'விண்வெளியில் வாழ்வு'..முளைக்க தொடங்கிய காராமணி விதை..இஸ்ரோ மகிழ்ச்சி!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.