கீரை (Spinach): கீரையில் லுடீன் (Lutein) மற்றும் ஜீயாக்சாண்டின் (Zeaxanthin) எனும் இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் மற்றும் நீல ஒளி சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுல்லாமல், மாகுலர் சிதைவு (Macular degeneration) மற்றும் கண்புரை (Cataract) ஆகியவற்றைத் தடுக்கவும் அவசியமாக இருக்கிறது.
2013 இல் NCBI நடத்திய ஒரு ஆய்வின்படி, தொடர்ந்து 4 வாரங்களுக்கு உணவில் கீரை சேர்த்துக்கொள்வதால், மாகுலர் பிக்மென்ட் ஆப்டிகல் அடர்த்தி 4 முதல் 5 சதவீதம் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. சூப், பொரியல் என தினமும் 1 கப் கீரை சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு (Sweet Potato): பீட்டா கரோட்டினின் சிறந்த மூலமாக இருக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளது. கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரவில் பார்வையை மேம்படுத்தவும் வைட்டமின் A சத்து முக்கியமானதாக இருக்கிறது. தினசரி ஒரு சிறிய அளவிளான வேகவைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்ப்பதன் மூலம் கண்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கின்றன.
ப்ரோக்கோலி (broccoli): வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களால் நிறைந்த ப்ரோகோலி, முதுமையில் விழித்திரை (Retina) ஆரோக்கியத்தை ஆதரிப்பதோடு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை, உணவில் அரை கப் வேகவைத்த ப்ரோக்கோலியைச் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, ஊட்டச்சத்துக்களை பெற மற்ற காய்கறிகளுடன் ப்ரோக்கோலியை சேர்த்து சாப்பிடலாம்.
கேரட் (Carrot): தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்ளும் போது, கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், உடலில் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்படுகிறது. இவை, கண் நோய்த்தொற்றுகளின் வாய்ப்பைக் குறைத்து, உங்கள் கண்களை நீரேற்றமாக வைத்திருக்கும். 1999 இல் NCBI நடத்திய ஒரு ஆய்வின்படி, கேரட் உட்கொள்வதால் இரவில் கண்பார்வை குறைபாடு இல்லாமல், தெளிவான மற்றும் கூர்மையான பார்வையை பெறலாம் என தெரிவித்துள்ளது. தினசரி ஒரு கப் கேரட்டை பச்சையாக அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.
குடை மிளகாய் (Capsicum): கேப்சிகம் என அழைக்கப்படும் குடைமிளகாய் பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. குறிப்பாக, சிவப்பு நிற குடை மிளகாயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது, கண்களில் உள்ள இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு கண்புரை ஆபாயத்தை குறைக்கிறது. சாலடு, சாண்ட்விச் என தினசரி உணவில் அரை கப் சிவப்பு கேப்சிகம் சேர்த்து வர கண் ஆரோக்கியமாக இருக்கும்.
தக்காளி (Tomato): தக்காளியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது, இது விழித்திரையைப் பாதுகாக்கும் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இவற்றில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்து, ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க:
இரும்புச்சத்து அதிகரிக்க வாரத்திற்கு 2 முறை இந்த காய் சாப்பிடுங்க..பலன்கள் ஏராளம்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.