கோயம்புத்தூர்: சந்தன மரங்களை வெட்டுதல் மற்றும் கடத்தலை தடுக்கும் விதமாக, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆனைமலை புலிகள் துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா தெரிவித்துள்ளார்.
சந்தன மரம் கடத்தலை தடுக்கும் விதமாக, பொள்ளாச்சி வனச்சரகம் போத்தமடை பகுதியில், ஆனைமலை கள துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானவேல் முருகன் தலைமையில் தமிழ்நாடு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், கொல்லங்கோடு ரேஞ்சர்ஸ் பிரமோத் உத்தரவின் பேரில், செக்சன் அதிகாரி மணிகண்டன் தலைமையில் கேரளா வனத்துறையினரும், தேக்கடி முதல் போத்தமடை வரை 17 கிலோ மீட்டர், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்றிணைந்து துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை...போதை இளைஞர் கைது! |
இது குறித்து ஆனைமலை புலிகள் துணை கள இயக்குநர் பார்க்வே தேஜா கூறுகையில், “ தமிழ்நாடு கேரளா வனப்பகுதியில், இரு மாநில வனத்துறை அதிகாரிகளும் மாதத்தில் நான்கு முறை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதை பாதுகாக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். எனவே, சந்தன மரங்களை பாதுகாக்கும் விதமாக தற்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால், மலைவாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேரளா வனப்பகுதிகள் இருந்து இடமாற்றம் செய்த வனவிலங்குகள் குறித்தும் தமிழ்நாடு வனத்துறையினரிடம், கேரளா வனத்துறையினர் கேட்டு தெரிந்துக்கொண்டனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.