வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் அங்கமாகவும் அண்ணாவின் பெயரில் மார்த்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை வேலூர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து தொடக்கி வைத்த நிலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மபுரம் ஷ்ருஷ்டி பள்ளி பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் 8 கிலோமீட்டர் தொலைவும், பெண்கள் 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கிலோமீட்டர் கார்ணாம்பட்டு வரையிலும், பெண்கள் 5 கிலோமீட்டர் சேவூர் வரையிலும் கடந்து வெற்றி பெற வேண்டும்.
இதில் பெண்கள் 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் ஜெயஸ்ரீயும், இரண்டாம் இடம் பாரதியும், மூன்றாமிடம் விஜயலட்சுமியும் வென்றனர். அதேபோல் 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதலிடம் திவ்யாவும், இரண்டாம் இடம் சிந்துமதியும், மூன்றாமிடம் மீனா என்பவரும் வென்றனர்.
இதையும் படிங்க: ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசு! ஆச்சரியத்தில் வாகன ஓட்டிகள்!
25 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை நவீன்குமார், பிரவீன்குமார், ரோமியாவும், 25 மேற்பட்டோர் பிரிவில் முதல் மூன்று இடத்தை வேல்குமார், நம்பிராஜன், குமாரவேலும் வென்றனர். இதில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் என 10 இடங்கள் வரை வெற்றி பெற்றவர்கள் தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது.