மதுரை: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசின் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சுங்க வசூல் செய்யப்படுகிறது என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ் வேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் என பல கோடி பேர் ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில் இந்த சாலையில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித முறையான விளக்கு வசதி, சைன் ஒளிர் விளக்கு போர்டுகள் உள்ளிட்ட வசதிகள் எதையும் முறையாக செய்யாமல், சுங்கச்சாவடி மையம் அமைத்தது சட்டவிரோதமானது.
மேலும், பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்கும் இடைஞ்சலாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி மையத்தை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சட்டவிரோதமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் பேரணிக்கு மறுப்பு - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி, "ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் தனுஷ்கோடி செல்கிறது. சாலை மிக மோசமாக உள்ளது. அடிப்படை வசதி கிடையாது. ஆனால் சட்ட விதிகளை மீறி சுங்கம் அமைத்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.