சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம், தாமதமாக இந்த வாரம் தான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதை தவிர வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. ஆனால் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் எல்லாம் இந்த வாரம் ஓடிடியில் அணிவகுக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 'கேம் சேஞ்சர்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ராம் சரணோடு கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கதைக்கு ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார்.
ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அரசியல்வாதிக்கு இடையே நடக்கும் மோதல்தான் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் மையக்கதை. படம் வெளியான போது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகியுள்ளது.
காதலிக்க நேரமில்லை
ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால், லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் என காதலின் நவீன பக்கங்களை கதைக்களமாக கொண்டிருந்தது இத்திரைப்படம். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் பேசிய விஷயங்கள் அனைவரையும் கவனிக்க வைத்தன. இந்நிலையில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மெட்ராஸ்காரன்
எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமான திரைப்படம் ’மெட்ராஸ்காரன்’. கலையரசன், நிஹாரிகா, கருணாஸ், ஐஸ்வர்யா தத்தா உட்பட பலர் நடித்த இத்திரைப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். பார்வையாளர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு இல்லாமல் தற்போது பிப்ரவரி 7ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ’மெட்ராஸ்காரன்’ திரைப்படம்.
டாகு மகாராஜ் (Daaku Maharaaj)
நடிகர் பாலையா எனும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கரந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ’டாகு மஹாராஜ்’. இத்திரைப்படத்தை பாபி கொல்லி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், ஷர்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா, சாந்தினி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு எஸ் தமன் இசை அமைத்துள்ளார். தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல கமர்ஷியல் வரவேற்பை பெற்ற ’டாகு மகாராஜ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி தேதி வெளியாக உள்ளது.
மிஸஸ் (Mrs.)
சன்யா மல்ஹோத்ரா, நிஷாந்த் தஹியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ’மிஸஸ்’ திரைப்படம் நேரடியாக ZEE5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சூரஜ், நிமிஷா நடிப்பில்மலையாளத்தில் வெளியான தி கிரேட் இண்டியன் கிச்சன் (The Great Indian Kitchen) திரைப்படத்தின் ரீமேக் தான் இத்திரைப்படம்.
அனுஜா(Anuja)
ஆடம் ஜெ கிரேவ்ஸ் (Adam J. Graves) இயக்கியுள்ள ’அனுஜா’ குறும்படமானது குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது. மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 97வது ஆஸ்கர் விருது விழாவின், லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவின் இறுதிப்பட்டியலில் அனுஜா இடம்பெற்றுள்ளது. 'அனுஜா' குறும்படம் பிப்ரவரி 5ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச திரைப்படங்கள், மேடை நாடகம், கலை நிகழ்ச்சிகள்.. சென்னையில் நடைபெறும் LGBTQ திரைப்பட விழா
'தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா பாகிஸ்தான்' (The Greatest Rivalry: India vs Pakistan)
இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் வெறுமனே விளையாட்டாக பார்க்கப்படாமல் பரம எதிரிகளுக்கிடையேயான நிகழும் போட்டியாக பார்க்கப்படுவதை பற்றிய ஆணவப்படம் 'தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா பாகிஸ்தான்' (The Greatest Rivalry: India vs Pakistan).
இந்த போட்டிகளுக்கு இரு நாட்டு ரசிகர்களையும் தாண்டி சர்வதேச அளவில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்விரு அணிகள் விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் தி கிரேட்டஸ்ட் ரிவல்ரி இந்தியா – பாகிஸ்தான் என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதில் இரு அணிகளின் முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.