விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கடந்த 2022 ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பள்ளி உடைமைகள் திருடப்பட்டும், காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தும், சேதப்படுத்தியும், மாடுகளையும் கலவரத்தில் ஈடுபட்ட சிலர் திருடிச் சென்றனர்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையின் முடிவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீதும் என மொத்தம் 916 பேர் மீதும், 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று (பிப்.7) சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 666 பேர் மீதும் நீதிமன்றத்திலும், 53 இளம் சிறார்களுக்கு எதிராகவும் சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பிற்காக, சேலத்தில் இருந்து வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்திலிருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற வழக்கில் 5 பேர் மீதும், 124 பேருக்கு எதிராக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோத சுங்கச்சாவடி? - ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இதற்கான விசாரணை மிக விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி எனவும், 2-வது குற்றவாளியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திராவிடமணி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இது போன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு அதிகமானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாகச் வரலாறு இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.