சென்னை: வரும் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
இந்த 2025-26 கள்வியாண்டிற்கான நீட் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று (பிப்.7) மாலை தொடங்கியது. நீட் தேர்வுக்கு வரும் மார்ச் 7ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமையின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவிற்கு 1700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோருக்கு 1600 ரூபாயும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 1000 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 9500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள 2961 யானைகளை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி! - MINISTER PONMUDI
இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவரக்ளுக்கான தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவிக்கப்படும். அதேபோல் 4ஆம் தேதி நடைபெறும் இந்த நீட் தேர்வு, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.