சென்னை:நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் பா.ரஞ்சித் சென்னையில் இன்று (பிப்.29) துவங்கி வைத்தார்.
தனது புரட்சிகரமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்துள்ளவர், இயக்குநர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, வியாபார ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இவர் படம் இயக்குவது மட்டுமின்றி, தமது நீலம் புரொடக்சன் மூலம், தனது உதவி இயக்குநர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார். குறிப்பாக, இவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் தற்போது கேஜிஎப் தொடர்பான கதையாக தங்கலான் என்ற படத்தை, நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்கி வருகிறார். மேலும் ஜே பேபி, தண்டகாரண்யம் ஆகிய படங்களையும் இவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர் மற்றும் இசையமைப்பாளராக உள்ள ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை பா.ரஞ்சித் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். ஜி.வி.பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிப்பதோடு, படத்திற்கான இசையையும் ஜி.வி.பிரகாஷ் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: "வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்" - பிரேமலு நடிகை பகீர் குற்றச்சாட்டு!