சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படமாக ஜனவரி 10ஆம் தேதி சங்கராந்தி அன்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் ’கேம் சேஞ்சர்’. இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பட வெளியீட்டு புரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழு மும்முரமாக இயங்கி வருகிறது.
அமெரிக்காவில் நடந்த முன்வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நேற்று (ஜனவரி 4) படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்திரனாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். துணை முதல்வராக பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
" i usually don't watch much films in theatre😀. in chennai days, i watched #Shankar sir's #Gentleman in black ticket🎫. I watched the #Kaadhalan movie with my grandmother🫶"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 4, 2025
- #PawanKalyan in today's #GameChanger event pic.twitter.com/zzNshf8rjX
நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் குறித்து பேசிய பவன் கல்யாண், "நான் முன்பு சென்னையில் இருந்த போது ஷங்கர் சாருக்காக பிளாக்கில் டிக்கெட் வாங்கி ஜென்டில்மேன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் நடிகனாக மாறுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. அவரது காதலன் படம் வந்த நேரம் என்னுடன் யாரும் இல்லாததால் என்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு போனேன். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். அவரது படங்களில் பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் முக்கியமான சமூக கருத்தும் இருக்கும்.
இதையும் படிங்க: யுவன் பார்க்க தான் சாது, ஆனால் பயங்கரமான அராத்து - இயக்குநர் விஷ்ணுவர்தன்!
இப்போது ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் போன்றோர் தேசிய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் தெலுங்கு சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது ஷங்கரின் படங்கள். அவரது தமிழ் படங்கள் தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி இங்கிருக்கும் பெரும்பான்மையான தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளன. அவர் நேரடி தெலுங்கு படம் இயக்க வேண்டும் என எப்போதும் விரும்பியிருக்கிறேன். அது ராம்சரண் மூலம் கேம் சேஞ்சரில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி," என புகழ்ந்து பேசினார்.
முன்னதாக நிகழ்வில் பேசிய நடிகர் ராம்சரண், "நிகழ்விற்கு வருகை தந்ததற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் முதல் தேர்தல் பேரணியின்போது மக்கள் கடல் போல திரண்டிருந்த சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. நான் இந்த திரைப்படத்தில் கேம் சேஞ்சராக நடித்திருக்கலாம். ஆனால், பவன் கல்யாண்தான் இந்திய அரசியலில் உண்மையான கேம் சேஞ்சர். அநேகமாக, ஷங்கர் சார் பவன் கல்யாணை இன்ஸ்பிரேஷனாக வைத்து என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கலாம்," எனக் கூறினார்.