சென்னை: திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தவறுதலாக ஐபோனை உண்டியலில் போட்டார். அதையடுத்து, அந்த ஐபோன் உரிமையாளர் அதே திருப்பு தர கோரி அறநிலத்துறைக்கு கடிதம் எழுதிய நிலையில் இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்நிலையில் அந்த ஐபோன் இன்று உரியவரிடம் தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஜி.கே.எம்.காலணி, சுப்பிரமணியன் தெரு, திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கை வசதி, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை திகழும்.
இதையும் படிங்க: ஸ்டாலினை சாடிய பாலகிருஷ்ணன்.. கொதித்து எழுந்த முரசொலி.. கூட்டணியில் களேபரம்!
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு (DMS) கீழே இந்த மருத்துவமனை தற்பொழுது உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி இந்த மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் குறித்து இன்று நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உண்டியலில் விழுந்த ஐபோன் இன்று உரிமையாளரிடம் தரப்படும்” என்றார். இன்றைய நிலவரப்படி உண்டியலில் விழுந்த ஐபோன் 13ப்ரோ சந்தை விலைப்படி சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.