மதுரை: தென்னக ரயில்வே பயணிகளில் வசதிக்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், பயணிகள் ரயில் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, இடைதரகர்கள் அதிகளவிலான பயணச்சீட்டுகளை பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. பல இடங்களில் இடைத்தரகர்கள் அதிக அளவில் பயணச் சீட்டுகளை பதிவு செய்வதாக புகார்கள் மற்றும் வதந்திகள் உலாவுகின்றன. இவர்கள் இணையதளத்திலும் அதிகளவில் பயணச்சீட்டு பதிவதாக புகார்கள் உள்ளன.
அதிரடி சோதனை
இவற்றின் உண்மைத் தன்மை அறிந்து தீவிர நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர். ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு பதிவு மையங்கள், டிராவல் ஏஜென்சிகள், தனியார் இணையதள மையங்கள் ஆகியவற்றில் ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி தவறான வழியில் அதிகளவில் பயணச் சீட்டு பதிவு செய்பவர்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் சிசிடிவி வாயிலாகவும், நடப்பில் உள்ள நவீன வசதிகளைக் கொண்டு ரயில்வே பயணச்சீட்டு பதிவு இணையதளங்களை கண்காணித்தலும் முக்கிய பணிகளாக நடைபெற்று வருகின்றன. அதேபோல கணினியைப் பயன்படுத்தி அதிகளவில் பயணச்சீட்டு பதிவு செய்பவர்களையும், கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி., உடன் கூட்டணி
ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிர்வாகத்துடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்பு படை இணையதளங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
இது மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் இணையதள கணக்கை முடக்கியும் வைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி-யும் (IRCTC) தனிநபர் பயணச்சீட்டு பதிவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி
இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 143-இன் படி அங்கீகாரம் இல்லாமல் பயணச் சீட்டு விற்பதும், பிரிவு 142(1)-இன் படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர மற்றவர் பயணச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவதும் குற்றமாக கருதப்படுகிறது. இவற்றை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு கடும் அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க |
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இடைத்தரகர்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோசடிகளை உடனுக்குடன் தடுக்க இயந்திர கற்றல் (Machine Learning) முறை பயன்படுத்தப்படுகிறது.
வரும் காலங்களில் மோசடிகளை தடுக்க முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது போன்ற தீவிர நடவடிக்கைகள் மூலமாக ரயில் பயணிகள் ரயில்வேயின் முழு பயன்களையும் எந்தவித இடையூறும் இன்றி அனுபவிக்க முடியும் என ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.