புதுக்கோட்டை: முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜகபர் அலி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்கள் 2003ஆம் ஆண்டு உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டுவந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜகபர் அலி கடந்த 17-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது டிப்பர் லாரி மோதி உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள்,நண்பர்கள் கூறியதை அடுத்து விபத்து வழக்கானது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். நான்கு பேரையும் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உரிமையியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மங்களூரு வங்கி கொள்ளை: நெல்லையைச் சேர்ந்த 3 பேர் கைது... போலீசிடம் சிக்கியது எப்படி?
இந்த நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை திருச்சி மண்டல உதவி இயக்குனர் சுரேஷ் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட உதவி இயக்குனர் ஜெயசீலா, நாகப்பட்டினம் மாவட்ட உதவி இயக்குனர் சுரதா ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள துளையானூரில் உள்ள ராசு, ராமையா ஆகியோருக்கு சொந்தமான ஆர்ஆர் கல்குவாரிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் கற்கள் வெட்டி எடுத்த பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய கனிம வளத்துறை அதிகாரிகள், "துளையானூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 409, 430 ஆர்.ஆர் கிரஷர் நிறுவனத்தின் உரிமம் 2003ல் முடிவடைந்து விட்டது. ஆனால், உரிமத்தை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக 21 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் கற்களை வெட்டி எடுத்து வந்துள்ளனர்,"என்று கூறினர்.
மேலும் உயிரிழந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகபர் அலி கடைசியாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,"70 ஆயிரம் டன் எடை கொண்ட கற்கள் பதுக்கி வைக்கட்டிருக்கிறது," என கூறியிருந்தார். இப்போதைய ஆய்வின்போது, 70 ஆயிரம் டன் எடை கொண்ட சக்கை என்று சொல்லக்கூடிய கற்களை பதுக்கி வைத்திருந்ததும், ஜகபர் அலி இறந்த பிறகு அதை திருப்பி எடுத்து வந்து குவாரியில் கொட்டியுள்ளதையும் அதிகாரிகளின் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், இதுபோன்று பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.