கோயம்புத்தூர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Union Budget) இன்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது நிதிநிலை அறிக்கையாகும். இதில், நிதுத்துறை, வேளாண்மை, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, நிதித்துறை, வரி, முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி, சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், ஜவுளித்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென் இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொழில்களுக்கு பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு கோவையில் உள்ள தொழில் துறையினர் ஆதரவும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
வரவேற்புக்குரிய பட்ஜெட்:
இது குறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சிறு குறு தொழிலுக்கு ஊக்கமாக உள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 5 கோடியிலிருந்து 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கான கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. இதனால், சிஎன்சி இயந்திரங்கள் (CNC machines) வாங்கும்போது பயனுள்ளதாக இருக்கும்.
வாடகை கட்டடங்களில் உள்ள சிறு குறு தொழில்களுக்கு டிடிஎஸ் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தியும், ஏற்றுமதிக்கு ரூ.20 கோடி வரை கடன் தருவதாக கூறியுள்ளனர். அது நம்பிக்கை ஏற்படுத்திள்ளது. பொம்மைகள் மற்றும் தோல் தொழிலுக்கு உதவி வழங்குவதாக கூறியுள்ளனர். தனிமனித வருமானம் ரூ. 12 லட்சம் வரை அதிகப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
இதையும் படிங்க: புதிய வருமான வரி நடைமுறையில் கணக்கை தாக்கல் செய்வோருக்கு ரூ.12 லட்சம் வரை இனி No Tax! ரூ.75,000 நிலைக்கழிவும் அறிவிப்பு!
உள்நாட்டு உற்பத்தியில் சிறு குறு தொழில்களின் பங்களிப்பு 30 சதவீதத்திலிருந்து அதிகரிக்க திட்டங்கள் கொடுத்துள்ளது வரவேற்கதக்கது. இது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும். இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழிலுக்கான கொள்கைகளை மாற்றுவார்கள் எனவும் முதலீடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனை நிறைவேற்றியுள்ளனர். இதனால், சிறு குறு தொழில் வளர்ச்சியை நோக்கி செல்லும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுண்டு கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை தனிநபர் வருமானம் இருந்தால் வரி இல்லை என்பது நடுத்தர மக்களின் சேமிப்புக்கு உதவும். விவசாயம், சிறு குறு தொழில்களுக்கான அறிவிப்புகள் வரவேற்கதக்கது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், சுற்றுலாத்துறை, கல்வி ஆகியவற்றிக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்தியா முழுவதும் 3 ஏஐ மையங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்கள். அதில் ஒரு மையம் கோவையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எனவே, இது ஒட்டுமொத்தமாக வரவேற்புக்குரிய பட்ஜெட்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமதாஸ் கூறியதாவது, “இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழில்களுக்கான கடன், 2028 க்குள் அனைவருக்கும் குடி நீர் திட்டம் வரவேற்கதக்கது. சிறு குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என கேட்டிருந்தோம். அது கிடைத்து விட்டது.
வரி வட்டி குறைக்க எதிர்பார்ப்பு:
வரி வட்டி குறைக்கப்படும் எனவும் ஏற்றுமதி கிளஸ்டர், மூலப்பொருள் வங்கி கேட்டிருந்தோம். இது குறித்த அறிவிப்புகள் வரவில்லை. எஸ்டியில் தவறு திருத்தம் 2 ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகளாக மாற்றியுள்ளனர். இது தொழில் வளர்ச்சிக்கு உதவும். ஒட்டு மொத்தமாக வரவேற்கத்தக்க விசயங்களும், ஏமாற்றமும் இந்த பட்ஜெட்டில் உள்ளது” என்றார்.
நூலுக்கான இறக்குமதி வரி ரத்து எதிர்பார்ப்பு:
தொடர்ந்து, இந்திய வர்த்தக சபை கோவை செயலாளர் பிரதீப் கூறுகையில், “இந்த பட்ஜெட் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தினால் வரவேற்கத்தக்க பட்ஜெட். மின் துறையில் நம் நாட்டை புதுப்பிக்க தக்க சக்தி நாடாக கொண்டு செல்ல நினைக்கின்றனர். அதில் முதல் முயற்சியாக பேட்டரி சேமிப்பு ஊக்குவிப்பு அறிவிப்பு. பேட்டரி சேமிப்பு வளர்ந்து வரும் டெக்னாலஜி, அதனை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது. சிறு சிறு அனுமின் நிலையங்கள் கொண்டு வருவோம் என கூறி இருப்பது நல்ல முயற்சி. நூலுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.