சென்னை: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டவை குறித்து பல தரப்பில் இருந்தும் கருத்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் தொழில் முதலீடுகள் வரும் ஆண்டில் இரு மடங்கு அதிகரிக்கும் என பொன் பியூர் கெமிக்கல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பொன்னுசாமி கூறியதாவது;
உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீதமும், உற்பத்தியில் 36 சதவீதமும் பங்களித்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: உயிர் காக்கும் 36 மருந்துகளின் சுங்கவரி ரத்து வரவேற்கத்தக்கது - மருத்துவர்கள் கூறுவது என்ன?
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் வகையில் அதற்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீடு செய்வதற்கான கட்டுப்பாட்டையும் தளர்த்தி உள்ளதால், அதிக அளவில் தொழில் தொடங்க முன் வருவார்கள். மேலும் கடன் 10 கோடி வாங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும். மேலும் உள்நாட்டு உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவத்திற்கான தளவாடங்களையும் உற்பத்தி செய்து அளித்து வருகிறோம். இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கான பொருட்களை சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றனர். வரும் ஆண்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவுத் தொழில்நுட்பத்தில் திறன்களை வளர்க்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்தார்.