சென்னை: சென்னையில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகயுள்ள ’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், சிவகார்த்திகேயன், அதர்வா, அதிதி ஷங்கர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்..
விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில், “ரொம்ப strictஆன தயாரிப்பாளர் சினேகா. அதனால் தான் நேரத்திற்கு வந்துவிட்டேன். நேரத்திற்கு வரவில்லை என்றால் வெளிய அனுப்பிருவாங்க என பயத்தோடு வந்தேன். நேசிப்பாயா படத்தில் ஒரு முக்கியமான ரோல் என சொல்லி நடிக்க கூப்பிட்டார்கள். முக்கியமானதா, இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.
நடிகை அதிதி பேசுகையில், “இந்த படம் எப்போது வெளியாகும் என வெகு நாட்களாக காத்திருந்தேன். விஷ்ணுவர்தனூக்காக தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். விருமன், மாவீரன் படங்களில் நடிக்கும் போது என்னிடம் கையில் ஸ்கிரிப்ட் இருந்தது. இந்த படத்தில் என் மீது முழு நம்பிக்கை வைத்து நேரடியாக படப்பிடிப்பில் தான் இயக்குநர் வசனங்களை கொடுத்தார். முற்றிலும் புதுமையான அனுபவம். ஆனால் அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா காம்போவில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன்.
என்னுடைய முதல் படத்திற்கு சிவகார்த்திகேயனிடம் தான் விருது வாங்கினேன், இரண்டாவது படத்தில் வருடன் நடித்தேன். நேசிப்பாயா படத்திற்கு விருந்தினராக வருவார் என்று எனக்கு தெரியாது நன்றி. பொங்கலுக்கு குடும்பத்தோடு படத்திற்கு வருவார்கள்” என்றார்.
இதனைத்தொடர்ந்து தொகுப்பாளர் பாலா, இந்த பொங்கலுக்கு உங்க குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய படமும் வருகிறது என கேட்கப்பட்ட கேள்விற்கு, ”என் அப்பாவின் படமும் வருகிறது, என்னுடைய படமும் வருகிறது. ஷங்கர் Vs அதிதி ஷங்கர் என்றெல்லாம் கேட்கின்றனர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, மக்களுக்கு நல்ல content நிறைய கிடைக்கும். அவ்வளவு தான் வேறு எதுவும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க:பாலா உனக்கு ஏன் இப்படி ஒரு குரூர புத்தி - ’சேது’ பற்றி பாலுமகேந்திரா
படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசும்போது, ”சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் எடுக்க நினைப்பேன். இந்த படத்தையும் புது ஜானரில் உருவாக்கியுள்ளேன். முதல் நாள் படப்பிடிப்பு முதல் இறுதி நாள் படப்பிடிப்பு வரை ஆகாஷின் வளர்ச்சியை கண்டு சந்தோஷமாக உள்ளது. ஆகாஷ் உடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. படத்தில் நடிக்க கல்கியை தொடர்புகொள்ளவே நிறைய கஷ்டப்பட்டோம். நயன்தாரா, விக்னேஷ் சிவன் மூலமாக கல்கி நம்பர் கிடைத்தது. இடைவேளையில் அதிதியின் நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டேன்” என்றார்
விஷ்ணுவர்தன் யுவன் ஷங்கர் ராஜா குறித்து பேசுகையில், “என்னுடைய திரைப்பயணத்தில் யுவன் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அறிந்தும் அறியாமலும் படத்தில் யுவனின் பாடல்கள் இல்லை என்றால் யாரும் பார்க்க வந்திருக்க மாட்டார்கள். பா. விஜய்க்கும் எனக்கும் மிக பெரிய சண்டை வரும். சில நேரங்களில் யுவனிடம் புகார் செய்வார். நாம் உயிர் போகும் டென்சனில் பாடல்கள் கேட்போம். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பார். அதுதான் அவரிடம் ஆச்சரியமாக பார்த்த விஷயம்.
அதே நேரம் உட்கார்ந்து இசையமைக்க ஆரம்பித்தால் அவ்வளவு தான். உங்களுக்கே தெரியும் அவர் ஒரு Drug Dealer. வெளியில் தான் பார்த்தால் சாதுவாக அமைதியாக இருப்பார். ஆனால் எங்கள் நண்பர்கள் குழுவில் யுவன் பயங்கர சேட்டைக்காரர். பயங்கரமாக டார்ச்சர் செய்வார். இவர் செய்யும் சேட்டையெல்லாம் அவரது பாடல்களை கேட்டால் மறந்து விடுவோம். அதனால் மற்ற இயக்குநர்களிடம் உங்களை விட நல்ல பாடல்கள் எனக்கு தான் என யுவனை மாட்டிவிடுவேன்” என கலகலப்பாக பேசினார்.